அமீரக செய்திகள்

உலகின் சிறந்த காட்சிகளைக் கொண்ட கட்டிடங்களின் பட்டியலில் இடம்பிடித்த புர்ஜ் கலீஃபா!! – பார்வையாளர்களின் ரிவியூக்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட தரவரிசை…

உலகின் சிறந்த காட்சிகளைக் கொண்ட முதல் 10 கட்டிடங்களில் துபாயின் புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) இடம் பிடித்துள்ளது. மேலும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் சிறந்த காட்சிகளைக் கொண்ட கட்டமைப்பாகவும் (structure) புர்ஜ் கலீஃபா பெயரிடப்பட்டுள்ளது.

Buildworld ஆல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, பயண வழிகாட்டல் தளமான Trip advisor இல் புர்ஜ் கலீஃபா பற்றிய ரிவியூக்களில் “அழகான காட்சிகள்” என்ற வார்த்தை சுமார் 2,132 முறை இடம்பெற்றுள்ளது. இதுவே துபாயின் ஐகானிக் அடையாளமான புர்ஜ் கலீஃபா கட்டமைப்பை உலகின் மிக அழகான காட்சிகளைக் கொண்ட சிறந்த 20 கட்டிடங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.

828 மீட்டர் நீளத்திற்கு உயர்ந்து நிற்கும் புர்ஜ் கலிஃபா உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றதுடன் உலகில் அதிக எண்ணிக்கையிலான கதைகள், உலகிலேயே அதிகம் ஆக்கிரமிக்கப்பட்ட தளம், உலகின் மிக உயர்ந்த வெளிப்புற கண்காணிப்பு தளம் (outdoor observation deck) மற்றும் உலகின் மிக உயரமான சர்வீஸ் லிஃப்ட் உள்ளிட்ட பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது.

புர்ஜ் கலீஃபாவின் 148 வது தளத்தில் இருந்து பார்க்கும்போது, துபாயின் அழகிய மற்றும் ஒப்பிடமுடியாத காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.இந்த அப்சர்வேஷன் தளத்தில் வெளிப்புற மொட்டை மாடி மற்றும் பிரீமியம் லாஞ்ச் போன்ற வசதிகளும் உள்ளன. மேலும், 125 மற்றும் 124 வது தளத்தில் இருந்து துபாயின் பரந்த காட்சிகளையும் பார்வையாளர்கள் அனுபவிக்கலாம்.

அதுபோல, அழகான காட்சிகள் பற்றி பார்வையாளர்கள் வழங்கிய ரிவ்யூக்களில் சுமார் 5,116 பதிவுகளுடன் (mention) பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் (Empire State Building) இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதுபோல, ஹங்கேரியில் உள்ள ஹலாஸ்பாஸ்டியா (Halaszbastya) மற்றும் ஐஸ்லாந்தில் உள்ள ஹால்கிரிம்ஸ்கிர்க்ஜா (Hallgrimskirkja) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அத்துடன் 2,685 பதிவுகளுடன் இங்கிலாந்தின் பிரபலமான லண்டன் ஐ (London Eye) ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!