அமீரக செய்திகள்

இரண்டே ஆண்டுகளில் 18 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டை குறைத்த துபாய்வாசிகள்.. பசுமையான சுற்றுச்சூழலை நோக்கிய துபாயின் பயணம்..!!

துபாயில் வசிப்பவர்கள் துபாய் கேன் (Dubai Can) முன்முயற்சியின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 18 மில்லியனுக்குச் சமமான 500 மிலி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் கேன் திட்டமானது கடந்த பிப்ரவரி 22, 2022 அன்று, துபாயின் பட்டத்து இளவரசர் மற்றும் துபாயின் நிர்வாகக் குழுவின் தலைவரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட நிலையான முயற்சியாகும்.

இந்த முன்முயற்சியானது துபாய் முழுவதும் தண்ணீர் நிலையங்களை நிறுவி, நிரப்பக்கூடிய தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்த தனிநபர்களை ஊக்குவிப்பதன் மூலம், நகரத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கழிவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த இந்த முயற்சியின் கீழ், துபாய் முழுவதும் 50 பொது நீர் நிலையங்கள் நிறுவப்பட்டது. அவையனைத்தும் ஒன்பது மில்லியன் லிட்டர் தண்ணீரை விநியோகம் செய்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘நிலைத்தன்மை ஆண்டு’ 2024 வரை நீட்டிக்கப்படுவதால், துபாய் கேன் முயற்சியானது நகரைச் சுற்றியுள்ள இடங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 30 கூடுதல் நீர் நிலையங்களுடன் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இது குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் மீண்டும் நிரப்பக்கூடிய தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துவது மற்றும் அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வாட்டர் ஃபில்டர்களை நிறுவுவது போன்ற எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் கார்ப்பரேட் உத்தி மற்றும் செயல்திறன் துறையின் செயல் CEO யூசுப் லூட்டா (Yousuf Lootah) பேசுகையில், துபாய் கேன் பிரச்சாரம் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளதால் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதன் மூலம், கடல்கள், வனவிலங்குகள் மற்றும் இயற்கை நிலப்பரப்புகளைப் பாதுகாப்பதுடன், பொது நீர் நிலையங்கள் போன்ற மறுபயன்பாட்டு விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கார்பன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், துபாய் கேன் இயக்கம் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் குறிப்பாக, துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல், D33 இன் இலக்குகளுக்கு ஏற்ப, துபாய் கேன் குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் பசுமையான நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவிப்பதை உறுதி செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!