அமீரக செய்திகள்

அமீரகத்தில் நிலவும் போட்டித்தன்மை.. ஊழியர்களுக்கு 5% சம்பள உயர்வை வழங்க இருப்பதாக நிறுவன முதலாளிகள் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் திறமையான ஊழியர்களுக்கான தேவை அதிகம் இருப்பதாலும் மற்றும் திறமையானவர்களை வேலைக்கு அமர்த்த போட்டிபோடும் பிராந்திய நாடுகளின் போட்டி காரணமாகவும், அமீரகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வை வழங்க திட்டமிட்டுள்ளதாக, நிறுவன முதலாளிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வுகளின் முடிவின்படி, கொரோனா பரவலால் ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், 2022 ஆம் ஆண்டிற்கு அமீரகத்தில் உள்ள நிறுவனங்களின் முதலாளிகள் திட்டமிட்டதை விட வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதும், இந்த முன்னேற்றம் அமீரகத்தின் பொருளாதாரம் எவ்வளவு சாதகமாக செயல்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அமீரகத்தின் பொருளாதாரம், இந்த ஆண்டு முதல் காலாண்டில் 8.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், மேலும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி சதவிகிதம் உயர்ந்து தனியார் துறை மற்றும் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் ஆய்வுகள் கூறியுள்ளது.

மேலும் நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர சம்பள உயர்வை வழக்கத்தை விட அதிகமாக ஐந்து சதவீதத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் காணப்பட்ட மூன்று முதல் நான்கு சதவீதத்தை விட அதிகமாகும் எனவும் ஆய்வை மேற்கொண்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரினால், அமீரகத்தில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் விளைவாக நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தில் நடைமுறையில் இருந்து வந்த விசா முறைகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் தொழிலாளர் ஒப்பந்த விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளூர் வேலை சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் அதை மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என்று தொழிலாளர் துறை சார்ந்த வல்லுனர்களும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!