அமீரக செய்திகள்

UAE: வெள்ள பாதிப்பால் வீடுகளை விட்டு வெளியேறிய குடும்பங்களுக்கு 50,000 திர்ஹம் நிதியுதவி..!! ஷார்ஜா ஆட்சியாளர் உத்தரவு..!!

அமீரகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலர் தனது உடைமைகளை இழந்தும் வீடுகளை இழந்தும் இன்னும் சிலர் தற்பொழுது வரை மாற்று இடங்களில் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ஷார்ஜா ஆட்சியாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஷார்ஜாவின் ஆட்சியாளர் சமீபத்திய வெள்ளத்தின் போது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு 50,000 திர்ஹம்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அமீரகத்தின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், வீடுகளை இழந்து ஷார்ஜா எமிரேட்டில் உள்ள தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் ஹோட்டல்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்த தொகையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த குடும்பங்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப உதவுவதே நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து சமூக சேவைகள் துறையின் தலைவர் அஃபாஃப் அல் மர்ரி உள்ளூர் வானொலி சேனல் ஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இம்முயற்சியின் மூலம் 65 குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் கிழக்குப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த வெள்ளத்தின் போது ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவில் சிக்கித் தவித்த சுமார் 870 பேரை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!