அமீரக செய்திகள்

UAE: 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 2,000 பிச்சைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள் கைது..!! துபாய் காவல்துறை தகவல்..!

அமீரகத்தில் பிச்சை எடுப்பது சட்ட விரோதமான செயல் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இருந்த போதிலும் தொடர்ந்து இந்த சட்ட விரோத செயலை ஒரு சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதனை எதிர்த்து காவல்துறையும் பிச்சை எடுப்பது சட்ட விரோதமானது என்றும் பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் இத்தகைய நபர்களைக் கண்டால் காவல்துறைக்கு புகார் அளிக்குமாறும் பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

மேலும் பிச்சை எடுப்பது பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும் அதிகாரப்பூர்வ மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் ஏழைகளுக்கு உதவ தயாராக உள்ளனர் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 800 பிச்சைக்காரர்கள் மற்றும் 1,300 தெருவோர வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.

சுமார் 415 பிச்சைக்காரர்கள் போலீஸ் செயலி மூலம் ‘police eye’-ல் குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, காவல் துறைக்கு சுமார் 12,000 புகார்கள் இந்த சேவை மூலம் கிடைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Police Eye’ சேவை என்பது துபாய் போலீஸ் செயலியில் கிடைக்கும் ஸ்மார்ட் அம்சமாகும். இது குடியிருப்பாளர்கள் சந்தேகத்திற்கிடமான செயல்களைப் புகாரளிக்கவும், முழுமையான ரகசியத்தன்மையில் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை வழங்கவும் அனுமதிக்கிறது. மேலும் சட்ட விரோத செயல்கள் மற்றும் மீறல்களை எளிதாகப் புகாரளிக்க பொதுமக்களை ஊக்குவிப்பதன் மூலம் பாதுகாப்பைப் பேணுவதையும் குற்றங்களைக் குறைப்பதையும் இந்தச் சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிச்சைக்காரர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் குடியிருப்பாளர்களின் பெருந்தன்மையை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் பணத்தை சுரண்டுவதைத் தடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும், பிச்சைக்காரர்கள் அனுதாபத்தைத் தூண்டுவதற்காக கதைகளை விவரிப்பதன் மூலம் குடியிருப்பாளர்களிடம் இருந்து விரைவாக பணம் சம்பாதிக்கிறார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், துபாயில் ஒரு பிச்சைக்காரரை 40,000 திர்ஹம்களுடன் போலீசார் கைது செய்திருக்கின்றனர். அதே போல் ஷார்ஜாவில், 65,000 திர்ஹம்ஸுடன் மூன்று பிச்சைக்காரர்களை போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்தகைய பிச்சைக்காரர்களை 901 என்ற கட்டணமில்லா எண் அல்லது துபாய் போலீஸ் செயலியில் உள்ள போலீஸ் ஐ (Police Eye) சேவையின் மூலமாகவும், சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் செயல்பாடுகள் குறித்து www.ecrime.ae என்ற இணையதளத்தில் புகார் செய்யுமாறும் காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!