அமீரக செய்திகள்

UAE: நிலையற்ற வானிலை எதிரொலி.. தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்கள் தொலைதூர கல்வியை அறிவித்த துபாய்..!!

அமீரகத்தில் எதிர்பார்க்கப்படும் நிலையற்ற வானிலை காரணமாக துபாயில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், மே 2 வியாழக்கிழமை மற்றும் மே 3 வெள்ளிக்கிழமைகளில் தொலைதூரக் கல்வியை கடைபிடிக்கும் என்று துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.

துபாய் எமிரேட்டின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த முடிவானது அனைத்து தனியார் பள்ளிகள், நர்சரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையில் துபாயில் இயங்கும் சில தனியார் பள்ளிகள், நாட்டில் வரவிருக்கும் மோசமான வானிலை காரணமாக தொலைதூரக் கல்விக்கான சாத்தியம் மற்றும் நிர்வாகத்தின் தயார்நிலை குறித்து ஏற்கனவே பெற்றோருக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் அமீரகத்தை தாக்கிய கனமழை காரணமாக ஏப்ரல் 16 அன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தொலைதூரக் கல்வியைக் கடைப்பிடித்தன. மேலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக துபாயில் தொலைதூரக் கற்றல் முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் எதிர்பார்க்கப்படும் நிலையற்ற காலநிலைக்கு தயார் நிலையில் இருப்பதாக தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் (NCEMA) திங்கட்கிழமை அறிவித்தது. அத்துடன், ​​அதிகாரிகள் இந்த நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தயார்நிலை குறித்தும் விவாதி்த்தனர்.

முன்னதாக, நிலையற்ற வானிலை குறித்து NCM நிபுணர் ஒருவர், வரவிருக்கும் வானிலை மாற்றம் ஏப்ரல் 16 அன்று நாட்டில் பெய்த கனமழை போன்றதாக இருக்காது என்றும், சில நாட்களில் மிதமான முதல் கனமழையுடன், அவ்வப்போது மின்னல் மற்றும் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!