அமீரக செய்திகள்

துபாய்: மெடிக்கல் ஃபிட்னஸ் முடிவுகளை இனி வெறும் 30 நிமிடங்களில் பெறலாம்..!!

அமீரகத்தில் ரெசிடென்ஸ் விசா பெறுவதற்கு மெடிக்கல் ஃபிட்னஸ் எனும் மருத்துவ உடற்தகுதிக்கான முடிவுகளை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மருத்துவ உடற்தகுதி அறிக்கையை பெற பெரும்பாலும் ஒரு நாள் ஆகும் நிலையில், ரெசிடென்ஸ் விசா விண்ணப்பதாரர்கள் இனி 30 நிமிடங்களிலேயே இந்த முடிவைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

துபாயில் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ள புதிய அதிநவீன மையத்தில் விண்ணப்பதாரர்கள் அரை மணி நேரத்தில் தங்களின் மருத்துவ உடற்தகுதி முடிவுகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சரும், துபாயின் துணை ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், துபாய் சர்வதேச நிதி மையத்தில் (DIFC) ஸ்மார்ட் சலேம் சென்டரை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் இந்த மையமானது, ரெசிடென்ஸ் விசாக்களுக்கான விரைவான மருத்துவ பரிசோதனையை வழங்கும் என்றும் இதனால் விண்ணப்பதாரர்கள் சோதனைகளுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த மையமானது இப்பகுதியில் முதல் தானியங்கி இரத்த சேகரிப்பு அமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் இந்த மையத்தில் ஏழு தனியார் இரத்த சேகரிப்பு அறைகள், மூன்று எக்ஸ்ரே அறைகள், ஒரு ஆய்வகம், எட்டு ஸ்மார்ட் செக்-இன் கியோஸ்க்குகள் (smart check-in kiosks), கூடுதலாக ஒரு எமிரேட்ஸ் ஐடி பயோமெட்ரிக்ஸ் அலுவலகம் மற்றும் ஒரு Amer ஆதரவு அலுவலகம் ஆகியவை உள்ளன.

அதுமட்டுமல்லாது இந்த மையம் பல ரோபோக்களைக் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 12,000 சதுர அடியில் பரவியுள்ள DIFCயின் ஸ்மார்ட் சலேம் சென்டர் ஒரு நாளைக்கு 800 பேரை கையாளும் திறன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது 100 சதவீதம் காகிதமற்ற சேவையை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் திறக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மையங்களில் இந்த மையம் இரண்டாவது மையம் ஆகும். சிட்டி வாக்கில் அமைந்துள்ள முதல் ஸ்மார்ட் சலேம் மையம் கடந்த 2020 இல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மையம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “துபாயின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த அதிநவீன வசதி, மக்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தக்கூடிய, தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குவதற்கான துபாயின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்று துபாய் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் அவத் செகாயர் அல் கெட்பி கூறியுள்ளார்.

எமிரேட்ஸ் ஐடி பயோமெட்ரிக்ஸ் மற்றும் பிற விசா விண்ணப்ப சேவைகள் விரைவில் இந்த புதிய மையத்தில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் 60-90 நிமிடங்களுக்குள் டிஜிட்டல் விசாவைப் பெறவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி வாக் மற்றும் DIFC ஆகிய இரண்டு ஸ்மார்ட் சலேம் சென்டர்களும் ஞாயிறு முதல் வெள்ளி வரை வாரத்தில் ஆறு நாட்கள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவது ஸ்மார்ட் சலேம் சென்டர் இந்த ஆண்டு இறுதிக்குள் Tecom இல் திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!