அமீரக செய்திகள்

பேட்டரிகள், பவர் பேங்குகள் செக் இன் செய்ய அனுமதி உண்டா..?? துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்ன..??

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB), ட்விட்டரில் விமான நிலைய பயணிகளுக்கு அதன் விதிமுறைகளை நேற்று (பிப்.27) நினைவூட்டியுள்ளது. அதன்படி, பயணிகள் தங்களுடைய செக்டு-இன் லக்கேஜில் உதிரி பேட்டரிகள் அல்லது பவர் பேங்க்களை எடுத்துச் செல்லவோ அல்லது வைக்கவோ வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், இவை அபாயகரமானவை என்றும் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், விமான நிலையத்தில் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு பல்வேறு பயணக் குறிப்புகளையும் பின்வருமாறு DXB வழங்கியுள்ளது.

— மொபைல் போன், பணப்பை, கைக்கடிகாரம், சாவிகள் போன்ற பொருள்களை கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

— மடிக்கணினி போன்ற சாதனங்களை எளிதில் வெளியே எடுத்து உள்ளே வைக்கக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும். ஏனெனில், ஸ்கேன் செய்யும் போது அதை தனியே ஒரு டிரேயில் வைக்க வேண்டியிருக்கும்.

— பயணிகள் அணிந்திருக்கும் பெல்ட்டில் உலோகக் கொக்கி (buckle) இருந்தால் அல்லது காலணிகளில் குதிகால் (heels) இருந்தால், அவற்றைக் கழற்றி சோதனைக்கான டிரேயில் வைக்க வேண்டும்.

— அத்துடன் கைப்பைகளில் தெளிவான, மறுசீரமைக்கக்கூடிய பிளாஸ்டிக் பையில் திரவ பொருள்களை வைக்கவும், அதேசமயம் ஒவ்வொரு திரவமும் 100 மில்லிக்கு மேல் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், விமான பயணத்தின்போது பயன்படுத்தப்படும் மருந்துகள், குழந்தைகளுக்கு பால், உணவுகள் மற்றும் சிறப்பு உணவுத் தேவைகளுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்கள்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (General Civil Aviation Authority) வழிகாட்டுதல்களின்படி, பயணத்தின்போது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் மற்றும் தடை செய்யப்படும் பொருள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. நிறுவப்பட்ட லித்தியம் பேட்டரிகள் கொண்ட பைகள், நீக்க முடியாத பேட்டரிகள்- பேட்டரிகளில் 0.3 கிராம் லித்தியம் உலோகம் இருக்க வேண்டும் அல்லது லித்தியம் அயன் 2.7 Wh (Watt-hour) ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. பயணிகள் கொண்டுவரும் பைகளை சரிபார்க்க வேண்டுமெனில், பேட்டரிகள் அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்ட பேட்டரிகளை கேபினில் எடுத்துச் செல்ல வேண்டும்.

2. எரிவாயு சிலிண்டர்கள், எரியக்கூடிய பொருள்கள், நச்சுத்தன்மையற்றவை போன்றவை தேவைப்பட்டால் பயண நேரத்திற்கு போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

3. ஹேர் ஸ்டைலிங் உபகரணங்கள் மீது பாதுகாப்பு உறை பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றை விமானத்தில் பயன்படுத்தக்கூடாது. ஹேர் ஸ்டைலிங் உபகரணங்களுக்கான ஸ்பேர் கேஸ் (Spare gas) செக்-இன் அல்லது கேரி பேக்கேஜ்களில் தடை செய்யப்பட்டுள்ளன.

லித்தியம் பேட்டரிகள் மற்றும் லித்தியம் பேட்டரியால் இயங்கும் சாதனங்கள்:

1. லித்தியம் உலோகம் அல்லது லித்தியம் அயன் செல்கள் அல்லது பேட்டரிகள், கையடக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (POC) போன்ற மருத்துவ சாதனங்கள் மற்றும் கேமராக்கள், மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களில் லித்தியத்தின் அளவு 2 கிராமுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. அதேவேளை, லித்தியம்-அயன் பேட்டரிகள் 100 Wh ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

2. அதேசமயம், கையடக்க மருத்துவ மின்னணு சாதனங்களுக்கு மட்டும், லித்தியம் மெட்டல் பேட்டரிகள் 2 கிராமுக்கு மேல் இருக்கலாம், ஆனால் 8 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. ஹேர் ஸ்ப்ரேக்கள், வாசனை திரவியங்கள், ஆல்கஹால் கலந்த மருந்துகள் போன்ற கதிரியக்கமற்ற மருந்து மற்றும் வேறு எந்தவித ஆபத்தும் விளைவிக்காத பொருள்களுக்கு அனுமதி உண்டு.

4. மேலும், மருத்துவ பயன்பாட்டிற்கு தேவையான ஆக்சிஜன் அல்லது மற்ற வாயு சிலிண்டர்கள் 5 கிலோவுக்கு மிகாமல் இருக்கவேண்டும். அத்துடன் திரவ ஆக்ஸிஜன் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஹாண்ட் பேக்கேஜில் தடை ஆனால் செக்டு-இன் லக்கேஜில் அனுமதி:

1. பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் அல்லது nonspillable wet batteries, நிக்கல்-மெட்டல் ஹைட்ரைடு பேட்டரிகள் (nickel-metal hydride batteries) அல்லது உலர் பேட்டரிகள் (dry batteries) கொண்ட சாதனங்கள் போன்றவை எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளன, ஆனால், செக்டு-இன் லக்கேஜில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

2. பாதரசம் கொண்ட தெர்மோமீட்டர் ஒரு நபருக்கு ஒன்று என்ற அளவில் பாதுகாப்பாக இருக்கும்போது, லக்கேஜில் வைக்க அனுமதி உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!