அமீரக செய்திகள்

அபுதாபியில் நடந்த ஹவுதி தாக்குதல்… அமீரகத்திற்கு குவியும் ஆதரவு.. உலக நாடுகள் கண்டனம்…!!

அபுதாபியில் இரண்டு இடங்களில் திங்கள்கிழமை ஹவுதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்த தாக்குதலை ஐக்கிய அரபு அமீரகம் “வெளிப்படையாகவும் பொறுப்புடனும்” கையாள்வதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், ஐக்கிய அரபு அமீரக அதிபரின் இராஜதந்திர ஆலோசகரான டாக்டர் அன்வர் கர்காஷ், பிராந்தியத்தின் பாதுகாப்பில் பயங்கரவாத குழுக்கள் குறுக்கிட முடியாது என்று கூறியுள்ளார்.

அதே போன்று ஐக்கிய அரபு அமீரக மண்ணில் ஹவுதிகள் நடத்திய தாக்குதலுக்கு வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் மக்கள் இருக்கும் பகுதிகளை ஹவுதி போராளிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதை நாங்கள் கண்டிக்கிறோம். நமது நாட்டின் மீதான இந்த சட்டவிரோத இலக்குக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

ஏமனை தளமாகக் கொண்ட ஹவுதி போராளிகளால் அபுதாபியின் இரு இடங்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்று ஐக்கிய அரபு அமீரகம் உறுதியளித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் ஒன்று முசாஃபாவில் உள்ள மூன்று அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) பெட்ரோலியம் டேங்கர்களில் வெடிப்புகளை ஏற்படுத்தியது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

ஐக்கிய அரபு அமீரக மண்ணில் நடந்த தாக்குதல்களைக் கண்டித்து, வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது “இந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றவியல் அதிகரிப்புக்கு பதிலளிக்கும் உரிமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்ளது.”

“இந்த தாக்குதலுக்கு ஹவுதி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி, ஹவுதி போராளிகள் செய்த கொடூரமான குற்றம் இது” என்று ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.

இந்த குழு தொடர்ந்து பயங்கரவாதத்தையும் குழப்பத்தையும் பிராந்தியத்தில் பரப்பி அதை சீர்குலைப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும் ஐக்கிய அரபு அமீரகம், பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத செயல்களை கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து Adnoc தெரிவிக்கையில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் முஸாஃபா எரிபொருள் கிடங்கில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளது.

அபுதாபி காவல்துறையின் கூற்றுப்படி, இறந்தவர்களில் இருவர் இந்தியர்கள், மற்றொருவர் பாகிஸ்தானியர் ஆவார். மேலும் 6 பேருக்கு லேசானது முதல் மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. “தொழில்முறை ஆதரவுக் குழுக்கள் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் ஆதரவளித்து வருகின்றன” என்று Adnoc ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் “சிவில் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் பதிலளிப்பவர்கள் மற்றும் Adnoc அவசரகால பதிலளிப்பு குழு உள்ளிட்ட அவசரகால பதிலளிப்பு குழுக்கள் விரைவாக சம்பவ இடத்திற்குச் சென்று தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.” எனவும் கூறப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள், விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண உதவுவதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளன.

அபுதாபியில் பதிவான இரண்டு தீவிபத்துகளில் மற்றொன்று அபுதாபி விமான நிலையத்தின் கட்டுமானப் பகுதியில் ஏற்பட்டது. இந்த சம்பவம் “சிறிய எண்ணிக்கையிலான விமானங்களுக்கு குறுகிய இடையூறு ஏற்படுத்தியது” என்று அபுதாபியை தளமாக கொண்ட எதிஹாட் ஏர்வேஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும் சாதாரண விமான நிலைய செயல்பாடுகள் விரைவாக மீண்டும் தொடங்கப்பட்டன என்று விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உலக நாடுகள் ஆதரவு

அபுதாபியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பல நாடுகள் கண்டித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக நாடுகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை கண்டித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில் அதன் முழு ஆதரவை சவூதி உறுதிப்படுத்துவதாக கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல், “இந்தப் பயங்கரவாதக் குழுவின் ஆபத்தையும், பிராந்தியத்திலும் உலகிலும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அதன் அச்சுறுத்தலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தாரின் வெளியுறவு துறை அமைச்சகம், சிவில் நிறுவல்கள் மற்றும் முக்கிய இடங்களை குறிவைப்பது அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் சட்டங்களையும் மீறும் பயங்கரவாதச் செயலாகக் கருதுவதாகக் கூறியிருக்கின்றது.

பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை “ஐக்கிய அரபு அமீரகத்தின் இறையாண்மை மீதான அப்பட்டமான தாக்குதல்” என்று தெரிவித்துள்ளது. ஓமான் வெளியுறவு அமைச்சகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தது.

குவைத் ஹவுதி போராளிகளால் முன்வைக்கப்படும் ஆபத்தை எடுத்துக்காட்டி அவர்களின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அதன் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. ஏமன் வெளியுறவு அமைச்சகம், ஜோர்டான், அரபு பாராளுமன்றம் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவையும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

அதே போல் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற மற்ற உலக நாடுகளும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த மாத தொடக்கத்தில், ஹவுதி இயக்கம், மேற்கு ஏமனின் ஹொதைதா துறைமுகத்தில் இருந்து மருத்துவமனை உபகரணங்களை ஏற்றிச் சென்ற அமீரக கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை (RWABEE) கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!