இந்திய செய்திகள்

இந்தியா: மீண்டும் வந்த பயண கட்டுப்பாடு.. பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்.. நாளை முதல் அமல்.. இந்திய அரசு அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்த இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய, புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 வழிகாட்டுதல்களை இந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான இந்த புதிய அறிவிப்பு நாளை டிசம்பர் 24, சனிக்கிழமை காலை 10 மணி முதல் முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசுகளுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கான இந்த புதுப்பிக்கப்பட்ட நெறிமுறையின்படி, இந்தியாவிற்கு பயணிக்கும் பயணிகளில் இரண்டு சதவீத பயணிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட பயணிகள் நிலையான நெறிமுறையின்படி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தியா வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் விபரங்களை கீழே காணலாம்:

பயணத்திற்கு முன்..

– இந்தியாவிற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளும் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை அட்டவணையின்படி கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக போட்டிருக்க வேண்டும்.

பயணத்தின் போது..

– முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனாவிற்கு எதிராக பயணிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விமானங்களில் அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,

– பயணத்தின் போது கோவிட்-19 அறிகுறிகள் கொண்ட எந்த எந்தவொரு பயணியும் நிலையான நெறிமுறையின்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும். அந்த பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

– மேலும் விமானத்தில் மற்ற பயணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும். விமானம் வந்திறங்கிய பின் தொடர் சிகிச்சைக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

விமான நிலையம் வந்திறங்கும் போது..

– போர்டிங் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

– விமான நிலையத்திற்குள் நுழையும் இடத்தில், அனைத்து பயணிகளுக்கும் சுகாதார அதிகாரிகளால் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

– வெப்ப பரிசோதனையின் போது அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நெறிமுறையின்படி நியமிக்கப்பட்ட மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

விமான நிலையம் வந்திறங்கிய பின்பு..

– விமானத்தில் வரும் மொத்த பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு கொரோனாவிற்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.

– இரண்டு சதவீத பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களால் அடையாளம் காணப்படுவார்கள் மற்றும் மாதிரிகளைச் சமர்ப்பித்த பிறகே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

– தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகளின் மாதிரிகள் நேர்மறையாக இருந்தால், அவர்களின் மாதிரிகள் மேலும் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்.

– நேர்மறை முடிவை பெற்ற பயணிகள் நிலையான நெறிமுறையின்படி சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

– அனைத்து பயணிகளும் தங்கள் வருகைக்குப் பின் தங்கள் உடல்நலத்தை சுயமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும், மேலும் அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள சுகாதார நிலையத்திலோ அல்லது தேசிய/மாநில உதவி எண்ணை அழைத்தோ சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!