அமீரக சட்டங்கள்

UAE: 6 மாதத்திற்கு மேல் வெளிநாடுகளில் தங்கியவர்கள் ‘Re-entry Permit’ பெறுவது எப்படி..?? கட்டணம் எவ்வளவு..?? அனைத்து தகவல்களும்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட்ட புதிய ரீஎன்ட்ரி பெர்மிட் நடைமுறையானது இப்போது ஆறு மாதங்களுக்கும் மேலாக அமீரகத்தை விட்டு வெளியே தங்கியிருக்கும் ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்களை அமீரகத்திற்கு மீண்டும் திரும்ப அனுமதிக்கிறது.

இது குறித்து வெளியான அறிக்கையின்படி, அத்தகைய குடியிருப்பாளர்கள் அதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) படி, விண்ணப்பமானது அமீரகத்திற்கு வெளியில் இருந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஆணையம் தெரிவிக்கையில் “விண்ணப்பதாரர் நாட்டிற்கு வெளியே 180 நாட்களுக்குப் பிறகு இந்தக் கோரிக்கைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர் ஒப்புதல் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழைய வேண்டும்” என்று குறிப்பிடுகின்றது.

பொதுவாக அமீரக ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர் 180 நாட்கள் அமீரகத்தை விட்டு வெளியே தங்கியிருந்தால், அது தானாகவே ரத்து செய்யப்படும். இருப்பினும் விதிவிலக்காக கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், தேவைப்படும் காலம் வரை வெளிநாட்டில் தங்கினாலும் அவர்களின் விசா பாதிப்பாகாது என்பது நடைமுறையில் இருந்து வரும் விதிமுறையாகும்.

இந்நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய என்ட்ரி பெர்மிட்டிற்கு விண்ணப்பிப்பது பற்றி பயண முகவர்கள் அளித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மறு நுழைவு அனுமதிக்கு (Re-entry Permit) யார் விண்ணப்பிக்கலாம்?

180 நாட்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே தங்கியிருக்கும் செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸி விசா உள்ள எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விசா நிலை செயலில் இருப்பதையும், அவர்களின் ரெசிடென்ஸி காலம் காலாவதியாகவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்த சேவைக்கு கட்டணம் எவ்வளவு?

சேவைக்கான வழங்கல் கட்டணம் (issuance fee) 800 திர்ஹம். அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்பு (ICP) ஆகியவற்றிற்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் கூடுதல் கட்டணங்கள் 150 திர்ஹம்ஸ் ஆகும். எனவே மொத்தக் கட்டணம் 950 திர்ஹம்களுக்கு சற்று அதிகமாகும்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அந்தத் தொகை திருப்பித் தரப்படுமா?

800 திர்ஹம் வழங்கல் கட்டணம் (issuance fee) திருப்பியளிக்கப்படும்.

180 நாட்களுக்கு மேல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தங்குவதற்கு என்ன காரணங்கள் ஏற்கப்படுகின்றன?

குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் “அந்த காலகட்டத்தில் நாட்டிற்கு வெளியே தங்கியதற்கான சரியான காரணம் வழங்கப்பட வேண்டும்” என்று ICP அதன் இணையதளத்தில் கூறுகிறது.

குடியிருப்பாளர்கள் சேவைக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

அவர்கள் அங்கீகாரம் பெற்ற பயண முகவர்கள் மூலமாகவும், ICP இணையதளம் அல்லது சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்தச் சேவையானது ‘6 மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தங்குவதற்கான அனுமதியை வழங்குதல்’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதை ICP தளத்தில் ‘ஸ்மார்ட் சேவைகள்’ என்பதன் கீழ் காணலாம்.

விண்ணப்பதாரருக்கு மறு நுழைவு அனுமதி எவ்வாறு வழங்கப்படுகிறது?

ICP வலைத்தளத்தின்படி, இந்த அனுமதி மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும். ICP இ-சேனல்கள் மூலமாகவும் அனுமதி பெறலாம் என்று ஒரு பயண முகவர் கூறியுள்ளார். அனுமதி பெற்ற பின்னரே விண்ணப்பதாரர் மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியும்.

இந்த சேவையைப் பெற என்ன வகையான விவரங்கள் தேவை?

விண்ணப்பதாரர்களின் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படைத் தகவல்கள்.

ஐடி மற்றும் பாஸ்போர்ட் எண்கள் உட்பட ஸ்பான்சர் தகவல்.

ஐடி எண், பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள்.

விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் விவரங்கள்.

ஆறு மாதங்களுக்கும் மேலாக அமீரகத்திற்கு வெளியே தங்கியதற்கான காரணம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!