வீட்டு தொழிலாளர்களின் வேலை ஒப்பந்தத்துடன் இன்சூரன்ஸை இணைக்கும் புதிய திட்டம்.. சவூதி அமைச்சகம் தகவல்..!!

சவூதி மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், வீட்டு தொழிலாளர்களுக்கான தொழிலாளர் ஒப்பந்தங்களுடன் இன்சூரன்ஸ் வழங்குவதை இணைக்கும் முயற்சியை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சவூதியில் இருக்கும் அமைச்சர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முயற்சி, சவூதி தொழிலாளர் சந்தையை மேம்படுத்துதல், பிற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை எளிதாக்குதல், ஒப்பந்த உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு சந்தையில் அபாயங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாத் அல் ஹம்மத் கூறுகையில், இந்த முடிவு விலைகளைக் குறைப்பதற்கும் அனைத்துத் தரப்பினருக்கும் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்சேர்ப்புச் செலவுகளுக்கான உயர் உச்சவரம்பையும் அமைச்சகம் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யும் என்றும், விதிமுறைகளை மீறும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கான உரிமங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட தண்டனைகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து வீட்டு தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்புகளும் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளமான Musaned மூலம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்புச் செலவுகளைக் கண்காணித்து, தொழிலாளர் சந்தையில் சேவைகளின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வீட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான செலவை VAT தவிர்த்து அதிகபட்ச வரம்பாக SR15,000 எனவும் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.