மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க அனுமதி..!! மகிழ்ச்சியில் பயணிகள்..!!
தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு விமான சேவையை வழங்கி வரும் மதுரை விமான நிலையமானது தினமும் குறிப்பிட்ட நேர அளவில் மட்டுமே இயங்கி வரும் நிலையில், இனி ஒரு நாளின் 24 மணி நேரமும் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் இனி நாள் முழுக்க மதுரை விமான நிலையம் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது வரை மதுரை விமான நிலையம் இரவு 8.40 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை விமான நிலையமானது சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு விமான சேவையை வழங்காவிடினும் இலங்கை, துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல பெரிதும் இந்த விமான நிலையத்திலேயே செல்கின்றனர். இந்த விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட ஆரம்பித்தால் இந்நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கருத்துகள் தெரிவிக்கின்றன.
மதுரை விமான நிலையம் மட்டுமல்லாது இந்தியாவில் மொத்தம் 5 விமான நிலையங்களுக்கு 24 மணி நேரமும் இயங்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.