அமீரக செய்திகள்

துபாய்: திறக்கப்பட்ட 2 ஆண்டுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பதிவு செய்த மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்..!!!

துபாயின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் (Museum of the Future) திறக்கப்பட்டு தற்பொழுது இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த புதுமையான மற்றும் எதிர்கால தலைசிறந்த படைப்பு உலகெங்கிலும் உள்ள 172 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டியுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகம் முழுவதிலுமிருந்து 20,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்க்கும் 280 க்கும் மேற்பட்ட முக்கிய நிகழ்வுகளையும் மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அரசுமுறைப் பயணங்களின் போது 40 க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் இங்கு வருகை தந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த அருங்காட்சியகம் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்காலத்திற்கான பார்வையை வெளிச்சம் போட்டுக் காட்ட 370 க்கும் மேற்பட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்ளூர் ஊடக பிரதிநிதிகளை தொகுத்து வழங்கியதாகவும் பதிவுகள் கூறுகின்றன.

இது குறித்து அருங்காட்சியகத்தின் தலைவர் முகமது அப்துல்லா அல் கெர்காவி அவர்கள் பேசுகையில், இரண்டே ஆண்டுகளில், இந்த அருங்காட்சியகம் புதுமை, கல்வி மற்றும் அறிவுசார் படைப்பாற்றலுக்கான ஆற்றல்மிக்க மையமாக உருவெடுத்துள்ளதாகவும், துபாயின் தலைமையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், உலகின் மிகவும் முன்னேறிய மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் நகர்ப்புற மையங்களில் துபாயை நிலைநிறுத்தியதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகத்தின் மைல்கல்:

கடந்த மார்ச் 3, 2015 அன்று ‘Museum of the Future’ திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

துபாய் மற்றும் அமீரகத்தின் எதிர்காலத்திற்கான பார்வையை உள்ளடக்கிய உலகளாவிய மையமாக இருக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் எதிர்கால தொலைநோக்கு நிறுவனமயமாக்கலை நிர்வகிக்கிறது.

பின்னர், 2017 இல் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 2018 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்பட்டு, பிப்ரவரி 22, 2022 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

தலைசிறந்த கட்டிடக்கலை:

துபாயின் ஐகானிக் அடையாளமான மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர், அதன் தனித்துவமான கட்டிடக்கலை வடிவமைப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறது, இது சிறப்பு ரோபோக்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 1,024 துருப்பிடிக்காத எஃகு துண்டுகளுடன், மொத்தம் 17,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

அருங்காட்சியகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் அரபு எழுத்துக்கள் எமிராட்டி கலைஞரான மேட்டர் பின் லஹேஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் ஷேக் முகமதுவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அந்த வார்த்தையைக் கொண்டு இந்த எழுத்துகள் கட்டிடம் முழுவதுமாக அமைக்கப்பட்டது.

இதில், “நாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழாமல் இருக்கலாம், ஆனால் நமது படைப்பாற்றலின் தயாரிப்புகள் நாம் மறைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பாரம்பரியத்தை விட்டுச்செல்லும்”, “எதிர்காலம் அதை கற்பனை செய்து, வடிவமைத்து, அதை செயல்படுத்தக்கூடியவர்களுக்கு சொந்தமானது. இது நீங்கள் காத்திருக்கும் ஒன்று அல்ல, மாறாக நீங்கள் உருவாக்குவது”, “வாழ்க்கையின் புதுப்பித்தலுக்கான ரகசியம், நாகரிகத்தின் வளர்ச்சி மற்றும் மனிதகுலத்தின் முன்னேற்றம் அனைத்திற்குமான ஒரே வார்த்தை: புதுமை” ஆகிய வார்த்தைகளைக் குறிக்கும் அரபு எழுத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!