வளைகுடா செய்திகள்

சவூதி: அமலுக்கு வந்த இலவச டிரான்சிட் விசா.. டிக்கெட் இருந்தாலே போதும்.. எப்படி விண்ணப்பிப்பது..??

சவூதி அரேபியாவின் விமான நிறுவன டிக்கெட்டை வைத்திருக்கும் பயணிகள் இனி இலவசமாக நான்கு நாட்களுக்கு சவூதியில் தங்கலாம் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சேவையானது விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த சேவை நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக வேண்டி புதிய எலக்ட்ரானிக் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சவூதி விமான நிறுவனத்தின் விமான டிக்கெட்டை வைத்திருக்கும் பயணிகளுக்கு இலவசமாக டிரான்சிட் விசா அளிக்கப்பட்டு அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு (அல்லது 96 மணிநேரம்) நாட்டிற்குள் தங்க அனுமதிக்கின்றது என கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா செய்யலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மின்னணு சேவை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சவூதியை தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களான Saudia மற்றும் Flynas ஆகியவற்றின் இணையதளங்கள் மூலம் இது பயன்பாட்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் அரப் நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விண்ணப்பம் வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றும், அமைச்சகம் அதைச் செயல்படுத்தி டிஜிட்டல் விசாவை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை மின்னஞ்சல் மூலம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விசா இலவசம் என்றும் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் மூன்று, நான்கு நாட்கள் என குறுகிய காலத்திற்கு சவூதி பயணிக்கவுள்ளவர்கள் இந்த டிரான்சிட் விசா சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!