அமீரக செய்திகள்

UAE: விரைவில் வரவுள்ள எக்ஸ்பிரஸ் டிஜிட்டல் கிளினிக்.. நோயாளிக்கு வீடியோவிலேயே மருத்துவர் ஆலோசனை..

துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற சுகாதார மாநாட்டின் இந்த ஆண்டு பதிப்பில் பல புதுமையான சுகாதார திட்டங்கள் ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகளால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் (EHS) காட்சிப்படுத்தப்பட்ட ஒரு எக்ஸ்பிரஸ் செக்-இன் கிளினிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடமிருந்து அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட் கிளினிக்குகள் முதல் கட்டமாக ஷார்ஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த எக்ஸ்பிரஸ் செக்-இன் கிளினிக்கில் நோயாளிகள் எவ்வாறு பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை EHS இன் டிஜிட்டல் ஹெல்த் துறையைச் சார்ந்த ஐடி நிபுணர் ஃபத்மா அல் அகமது விளக்கியுள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தின்படி முதலில் எமிரேட்ஸ் ஐடியை அங்கே கொடுக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் செருக வேண்டும். அதன்பிறகு நோயாளியின் விவரங்கள் மருத்துவரிடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர், நோயாளிக்கு காப்பீடு வசதி உள்ளதா இல்லையா என்பது அதில் இருக்கும் திரையில் நோயாளிக்கு காண்பிக்கப்படும். காப்பீடு இல்லையெனில், நோயாளி பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த செயல்முறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டதும், அதற்கு அடுத்தகட்டமாக டிஜிட்டல் கிளினிக் உள்ளே நுழைய நோயாளி எமிரேட்ஸ் ஐடியை மீண்டும் செருக வேண்டும்.

இந்த டிஜிட்டல் கிளினிக்கில் திரையில் தோன்றும் மருத்துவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நோயாளி அமர்ந்திருக்கும் நாற்காலியில் பல்வேறு மருத்துவ உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு உடலை பரிசோதிக்க வேண்டும் என்று வீடியோவில் மருத்துவர் வழிகாட்டுவார்.

எனவே, நோயாளி பிபி மானிட்டர், தெர்மாமீட்டர் மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய மருத்துவ உபகரணங்களைக் கொண்டு சுயபரிசோதனை செய்ய இயலும். சுயபரிசோதனையில் கிடைத்த விவரங்கள் திரையில் பதிவாகும். அதன்படி, மருத்துவர்கள் வழங்கும் மருந்துச் சீட்டைப் பெற்றுக் கொண்டு நோயாளிகள் மருந்தகங்களுக்குச் செல்லலாம்.

இதேபோல், EHS இரண்டு டேஷ்போர்டுகளை வழங்கியுள்ளன. இதன் பயன்பாடு குறித்து மரியம் அல் அலி கூறுகையில், இந்த டேஷ்போர்டுகள் மனநல மற்றும் பக்கவாத விகிதங்களின் தரவுகளை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த நோயினால் நாட்டில் ஏற்படும் , சிக்கல்கள், இறப்பு மற்றும் சமூகங்களின் பாதுகாப்பு போன்ற புள்ளிவிவரங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் அவரது கூற்றுப்படி, இந்தத் தரவு எந்த வகையான சிக்கல்களையும் குறைக்க பயன்படும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!