அமீரகத்தில் நிலவும் குளிர்.. இந்த மாதம் முழுவதும் தொடரும் என வானிலை மையம் கணிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜனவரி மாதம் பெரும்பாலும் மழையும் குளிரும் நிலவி வந்த நிலையில் இந்த பிப்ரவரி மாதத்திலும் அமீரகத்தில் தொடர்ந்து குளிர் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய வானிலை மையம் தெரிவிக்கையில் அமீரகத்தில் பிப்ரவரி மாதம் முழுவதும் பெரும்பாலும் வானிலை குளிர்ச்சியாக இருக்கும், இருப்பினும் மாதத்தின் இரண்டாம் பாதியில் சில பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் பிப்ரவரி மாதத்திற்கான காலநிலை அறிக்கையில், இந்த மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 23 ° C முதல் 28 ° C வரை இருக்கலாம் என்றும், அதே நேரத்தில் குறைந்தபட்சம் 12 ° C மற்றும் 16 ° C வரை இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடா பகுதியில் வடக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுடன் தொடர்புடைய உயர் அழுத்த அமைப்பின் விரிவாக்கத்தின் கீழ் இருக்கும் குளிர்கால மாதங்களில் பிப்ரவரி மாதமும் ஒன்றாகும். எனவே, பிப்ரவரி மாதத்தில் பொதுவாக வெப்பநிலை தொடர்ந்து குறைந்து காணப்படும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மேலும் இந்த மாதத்தில் நிலையற்ற வானிலையாக இருக்கும் என்றும், சில சமயங்களில் காற்றுடன் தூசி மற்றும் மணல் வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில நேரங்களில் மழையம் மேக மூட்டமான வானிலையும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் மூடுபனிக்கான வாய்ப்புகளுடன் இந்த மாதத்தில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.