அமீரக சட்டங்கள்

UAE: ஒருவருக்கு பயணத்தடை உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?? பயணத்தடையை ரத்து செய்வதற்கான வழிமுறைகள் என்ன..??

வெளிநாட்டிற்கு பயணம் செல்ல விரும்பும் ஒருவர் மீது அந்த நாட்டின் நீதிமன்ற வழக்கு நடந்துகொண்டிருந்தாலோ அல்லது கிரெடிட் கார்டு கட்டணங்களைத் தவறவிட்டாலோ அவருக்கு பயணத் தடை விதிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் இது குறித்த பல விபரங்கள் இன்னும் பலரும் அறிந்திருக்கவில்லை.

அமீரகத்தை பொறுத்தவரை, தங்களின் கிரெடிட் கார்டு கட்டணங்களை செலுத்த தவறவிட்டவர்கள், நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட சில குற்றங்களை புரிந்தவர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் வருவதற்கு பயண தடை விதிக்கப்படும். இது போன்று அமீரகத்தில் ஒவ்வொரு பயணியும் அவர்கள் மீது இது போன்ற பயணத் தடைகள் உள்ளதா என்பதையும் அது ஏன் விதிக்கப்பட்டது என்பதையும் முன்கூட்டியே அறிந்துகொள்ளவும் அதே நேரத்தில் மேற்கூறியவாறு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் அதனை எவ்வாறு ரத்து செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

பயணத்தடை ஏன் விதிக்கப்படுகிறது?

துபாயில் இருக்கும் சட்ட ஆலோசகர் டாக்டர் ஹசன் எல்ஹாய்ஸ் அவர்களின் கருத்துப்படி, இமிகிரேஷன் விதிமீறல்கள், நிலுவையில் உள்ள கடன்கள் அல்லது தனிப்பட்ட அந்தஸ்து சட்ட சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. பெரும்பாலும் நிலுவையில் உள்ள கடன்கள் காரணமாக பயணத் தடை விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, ஒருவருக்கு பயணத்தடை ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அது குறித்த விவரங்கள் அவருக்கு தெரிவிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கான காரணங்களைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை அந்த நபர் திட்டமிடலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதனடிப்படையில் தனிநபர்கள் தங்களுக்கு பயணத் தடை உள்ளதா என்பதைச் சரிபார்க்கும் பல்வேறு வழிகளைப் பற்றி கீழே காணலாம்.

துபாய்:

துபாயில் ஒருவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

  • The Dubai Police app –
  • The Dubai Police website – dubaipolice.gov.ae
  • Smart Police stations

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • துபாய் போலீஸ் ஆப் அல்லது இணையதளத்தை உள்ளிட்டு ‘services’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் ‘Criminal Status of Financial cases’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின் எமிரேட்ஸ் ஐடி எண்ணை உள்ளிடவும்
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் SMS மூலம் அனுப்பப்பட்ட OTP மூலம் அடையாளத்தைச் சரிபார்க்கவும்

அபுதாபி, ஃபுஜைரா, அஜ்மான், ஷார்ஜா, உம் அல் குவைன்

மேற்கண்ட எமிரேட்டைச் சேர்ந்தவர்கள் அபுதாபியின் நீதித்துறையின் Estafer சேவை மூலம் பயணத்தடையை தெரிந்து கொள்ளலாம். அபுதாபியில் வசிப்பவர்கள் தங்களுக்கு எதிரான ஏதேனும் வழக்கு அல்லது உரிமை கோரல்கள் பொது வழக்கு துறையால் கோரப்பட்டதா என்பதை இது சரிபார்க்க உதவுகிறது. இந்த சேவையை கீழ்க்கண்ட லிங்க் மூலம் அணுகலாம். https://www.adjd.gov.ae/sites/eServices/EN/Pages/Estafser.aspx

ராஸ் அல் கைமா:

RAK அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பயன்படுத்துவதன் மூலம், ராஸ் அல் கைமாவின் எமிரேட்டில் நீதிமன்றம் அல்லது பொது வழக்குகளின் நிலையை சரிபார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி இந்த சேவையை அணுகலாம்.

https://www.rak.ae/wps/portal/rak

அத்துடன் 07 2070000 என்ற எண்ணில் ராஸ் அல் கைமாவின் பொது வழக்கு துறையை தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது.

இமிகிரேஷன் அல்லது காவல்துறை அதிகாரியுடன் சரிபார்த்தல்:

பாஸ்போர்ட் எண்ணைப் பயன்படுத்தி Amer சேவையை தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது அமீரகத்தில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட புகாரைப் பற்றி விசாரிப்பதன் மூலமோ பயணத் தடையை சரிபார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞரை நியமித்தல்:

மேற்கூறியுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை சரிபார்க்க முடியாத நிலையில், வழக்கறிஞரின் சேவையை நாடும் தேர்வு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வழக்கறிஞர் குறிப்பிட்ட நபருக்கு பயணத் தடை உள்ளதா என்பதையும், அதன் பின்னணியில் உள்ள காரணங்களையும் கண்டறிந்து முடிந்தால் தடையை நீக்குவதற்கு உதவவும் முடியும்.

இதற்கெல்லாம் மாறாக, தனிநபர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே இருந்தால், ஒரு சட்ட நிறுவனத்துடன் தொடர்புகொண்டு, அவரது சார்பாக செயல்பட ஒரு வழக்கறிஞருக்கு அதிகாரம் வழங்கினால், பயணத் தடை தொடர்பான அனைத்து விவரங்களையும் அந்த நபர் பெறுவதை உறுதிசெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, கிரிமினல் குற்றம் அல்லது வேறு காரணத்தால் பயணத் தடை விதிக்கப்பட்டால், பயணத் தடை உத்தரவை ஆன்லைனில் இலவசமாக மேல்முறையீடு செய்வதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க நீதி அமைச்சகத்தின் போர்ட்டல் அனுமதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத் தடையை எப்படி நீக்குவது?

கிரிமினல் குற்றம் அல்லது வேறு காரணத்தால் பயணத் தடை விதிக்கப்பட்டால், பயணத் தடை உத்தரவை ஆன்லைனில் இலவசமாக மேல்முறையீடு செய்வதற்கான கோரிக்கையை தனிநபர்கள் அல்லது வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க நீதி அமைச்சகத்தின் இணையதளம் அனுமதிக்கிறது.

இந்த செயல்முறைக்கு ஐந்து வேலை நாட்கள் ஆகும், மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆதரிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பயணத் தடை ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சேவைக்கு UAE பாஸ் தேவை. அதாவது எமிரேட்ஸ் ஐடி போன்ற தொடர்புடைய ஆவணங்கள் இல்லாதவர்கள், அவர்கள் சார்பாக செயல்பட அதிகாரம் பெற்ற நபரை பவர் ஆஃப் அட்டர்னி வழங்க வேண்டும் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நிலுவையில் உள்ள கடன் காரணமாக பயண தடை இருந்தால், நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்தி, அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்த பிறகு பயணத்தடை நீக்கப்படலாம்.

இதற்காக கடன் கொடுத்த நிறுவனத்திடம் இருந்து கடனாளி ஒரு அனுமதிக் கடிதத்தைப் (clearance certificate) பெற வேண்டும் மற்றும் பயணத் தடையை நீக்குவதற்கான கோரிக்கையை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு பயணத் தடையை நீக்குவதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒரு முடிவு வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!