அமீரக செய்திகள்

UAE: 12,000 மலர்கள்.. கால்பந்து மைதானம்.. சிறுவர்கள் விளையாடும் பகுதி.. பிரம்மாண்டமான புதிய பார்க்கை திறந்துள்ள ஷார்ஜா..!!

அமீரகத்தின் முனிசிபல் கவுன்சில் மற்றும் ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி ஆகியவை ஷார்ஜாவில் ஒரு பெரியளவிலான புதிய பார்க்கை திறந்து வைத்துள்ளன. சுமார் 72,000 சதுர மீட்டர் பரப்பளவில் 12,000 மலர்களைக் கொண்டிருக்கும் இந்த பிரம்மாண்டமான புதிய பார்க்கானது அல் கராயின் பார்க் 4 (Qarayen 4 Park) என அழைக்கப்படுகிறது.

இந்த பார்க்கானது அமீரகத்தின் உச்ச கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் உத்தரவுகளுக்கு இணங்க, ஷார்ஜா எமிரேட்டில் பசுமையை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வையாளர்கள் பல்வேறு செயல்பாடுகளை அனுபவிக்கும் வகையில் பல சேவை வசதிகள் இந்த பார்க்கில் இடம்பெற்று உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

ஷார்ஜா முனிசிபல் கவுன்சில் தலைவர் சலீம் அலி அல் முஹைரி, முவைலே புறநகர் கவுன்சில் தலைவர் காலித் அப்துல்லா அல் ரபூய் மற்றும் ஷார்ஜா கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் நகர அதிகாரிகள் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். 

இது பற்றி ஷார்ஜா முனிசிபல் கவுன்சில் தலைவர் சலீம் அலி அல் முஹைரி கூறுகையில், “ஷார்ஜா அரசாங்கம் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு இனிமையான மற்றும் அழகான சூழ்நிலையை வழங்க ஆர்வமாக உள்ளது. பூங்காவில் 12,000 மலர்கள் உள்ளன”.

”அத்துடன் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் மைதானம், கால்பந்து மைதானம், கழிவறைகள், உடற்பயிற்சி விளையாட்டுகள், நடைபயிற்சி மற்றும் ஓடுவதற்கு பூங்காவிற்கு வெளியே நடைபாதைகள் உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.  பூங்காவில் பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள் இளைப்பாறுவதற்காக இருக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 90 மின் சேமிப்பு மின்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் ஓபைத் சயீத் அல் துனைஜி கூறுகையில், பொதுமக்கள் இந்த புதிய பார்க்கிற்கு வருகை தந்து தங்களின் நேரங்களை இனிமையாக செலவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் முனிசிபாலிட்டி குழந்தைகளுக்கான ஒர்க் ஷாப், போட்டிகள், நிகழ்வுகள் மற்றும் பிற செயல்பாடுகளையும் இந்த பார்க்கில் ஏற்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!