அமீரக செய்திகள்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அமீரகத்தின் 7 முக்கியமான விசா நடைமுறை மாற்றங்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா தொடர்பான சீர்திருத்தங்கள் கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து விசா தொடர்பான பல மாற்றங்கள் அமீரகத்தில் தொடர்ந்து நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த சீர்திருத்தங்களில் கோல்டன் விசா திட்டம் விரிவுபடுத்துதல், புதிய ஐந்தாண்டு கிரீன் விசாக்கள் போன்றவை அடங்கும். மேலும் விசா சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் விசா காலாவதியான பிறகு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் உள்ளிட்ட பல மாற்றங்கள் சமீபத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரெசிடென்ஸி தொடர்பான ஏழு முக்கிய புதிய நடைமுறைகள் குறித்த விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

>> குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்வதற்கான விதிகளில் தளர்வு:

அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது குடும்பங்களாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் நிவாரணமாக வந்துள்ளது. இதன்படி குடியிருப்பாளர்கள் தங்களின் மகன்களுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்யலாம். முன்னர் இது 18 வயதாக இருந்தது. மேலும் திருமணமாகாத மகள்களுக்கு ஸ்பான்சர் செய்ய வயது வரம்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த விதிகளானது அனைத்து வகையான ரெசிடென்ஸிக்கும் பொருந்தும்.

>> கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருட விசாவில் பெற்றோருக்கு ஸ்பான்சர் செய்ய அனுமதி

கோல்டன் விசா வைத்திருக்கும் நபர்கள், அவர்களின் பெற்றோருக்கு 10 வருட விசாவிற்கு ஸ்பான்சர் செய்யலாம். முன்னதாக, நீண்ட கால ரெசிடென்ஸி திட்டப் பயனாளிகள், வழக்கமான ரெசிடென்ஸி விசாவைப் போலவே, பெற்றோருக்கு ஓராண்டுக்கு நிதியுதவி செய்யலாம் என கூறப்பட்டிருந்தது.

>> விசா கட்டணங்கள் அதிகரிப்பு:

அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) ஆகியவற்றிற்கான ஃபெடரல் ஆணையம் மூலம் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களிலும் 100 திர்ஹம்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஸ்மார்ட் சேவைக் கட்டணம் எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ஸி விசாக்களுக்கும் பொருந்தும்.

>> ஃப்ரீசோன் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் குறைப்பு:

ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் ஃப்ரீசோன் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

>> விசா காலாவதியான பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற நீண்ட கால அவகாசம்:

ரெசிடென்ஸி விசா ரத்து செய்யப்பட்ட பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறுவதற்கான சலுகைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 60 முதல் 180 நாட்களுக்குள் இருக்கும் என கூறப்படுகின்றது. இது முன்னர் 30 நாட்களாக இருந்தது. 

>> பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்ப் நீக்கம்:

பாஸ்போர்ட்டில் ரெசிடென்ஸி விசா ஸ்டிக்கர்களை முத்திரையிடும் நடைமுறையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ளது. மாறாக, குடியிருப்பாளர்களின் எமிரேட்ஸ் ஐடிகள் அதிகாரப்பூர்வமாக அவர்களின் ரெசிடென்ஸி ஆவணங்களாகச் செயல்படுகின்றன.

>> 6 மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கான மறு நுழைவு அனுமதி:

ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியே 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் அமீரக ரெசிடென்ஸி முன்பு ரத்து செய்யப்படும். ஆனால், இப்போது அத்தகைய குடியிருப்பாளர்கள் தாங்கள் அமீரகத்தை விட்டு வெளியே தங்கியதற்கான காரணத்தைக் குறிப்பிடுவதன் மூலம் மறு நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர் ஒப்புதல் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழைய வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!