UAE: விசிட் விசா முடிந்து ஒரு நாள் தங்கினாலும் தலைமறைவு வழக்கு.. 5 நாட்களுக்கு மேல் ‘Blacklist’ பட்டியலில் சேர்ப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில மாதங்களாகவே விசா தொடர்பான பல்வேறு புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அமீரகத்தில் இருக்கும் டிராவல் ஏஜென்ட் மற்றும் டூர் ஆபரேட்டர்கள் விசிட் விசாவிற்கான காலாவதி தேதி முடிந்த பிறகும் அமீரகத்தில் தொடர்ந்து தங்கும் நபர்கள் மீது தற்பொழுது தலைமறைவு வழக்கு (absconding case) பதிவு செய்கின்றனர் என்று தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விசா காலாவதியான பிறகு ஐந்து நாட்களுக்குள் அமீரகத்தை விட்டு வெளியேறவில்லை என்றால், காலாவதி தேதி முடிந்தும் தங்கியுள்ள நபர்கள் ‘Blacklist’ பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும், அவர்கள் மீண்டும் அமீரகம் அல்லது வேறு ஏதேனும் GCC நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான ஒரு டிராவல் ஏஜென்சியின் சுற்றறிக்கை ஒன்றில்: “சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்க! உடனடியாக அமலுக்கு வரும் வகையில், விசிட் விசாவிற்கான செல்லுபடி காலம் முடிந்து ஒரு நாள் கூடுதலாக தங்கியிருந்தாலும் அவர்கள் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி தலைமறைவு வழக்கு பதிவாகி விடும். இதனை தவிர்க்க உங்கள் விசாவை நீட்டிக்கவும் அல்லது நாட்டை விட்டு வெளியேறவும்” என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு சுற்றறிக்கையில் “காலாவதியான விசாவுடன் தங்கும் சுற்றுலாவாசிகளுக்கான இறுதி நினைவூட்டல். காலாவதி ஆகிய விசிட் விசாவில் தங்கியிருப்பவர்கள் தலைமறைவானவர்கள் என வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் விசிட் விசா காலாவதியாகி 5 நாட்களுக்கு மேல் தங்கியிருப்பவர்கள் பயணத்தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் அமீரகம் அல்லது GCC நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, தாமதிக்காமல் நாட்டை விட்டு வெளியேறவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சுற்றறிக்கைகள் பயண முகவர்களிடமிருந்து வந்தவையே தவிர இமிகிரேஷன் அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்த தலைமறைவு வழக்குகள் ஏன் பதிவு செய்யப்படுகின்றன என்பதை விளக்கி, ரூஹ் டூரிஸத்தின் செயல்பாட்டு இயக்குநர் லிபின் வர்கீஸ் கூறுகையில் “30 நாட்கள் அல்லது 60 நாட்கள் விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யும் எந்தவொரு சுற்றுலாவாசியும் எங்கள் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் உள்ளனர். அவர் தனது விசா கால அவகாசத்தை மீறினால் நாங்கள் பிரச்சனைகளில் சிக்கி நஷ்டம் அடைகிறோம். எங்கள் பாதுகாப்பிற்காக இவ்வாறு காலாவதி முடிந்தும் அமீரகத்தில் தங்கும் சுற்றுலாவாசியை நாங்கள் தலைமறைவாக இருப்பதாக புகார் தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ஒரு சுற்றுலாவாசி விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தால், அதிக காலம் தங்கியதற்கான அபராதம் எங்கள் மீது விதிக்கப்படும். பின்னர் அந்த நபரிடம் இருந்து அபராதத் தொகையை நாங்கள் மீட்டெடுக்கிறோம்”
“விசா காலம் முடிந்தும் அதிக காலம் தங்கியிருக்கும் நபர் அபராதத்துடன் நாட்டை விட்டு வெளியேற ஒரு எக்ஸிட் பாஸையும் பெற வேண்டும், இது எங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனால் அவர்கள் தலைமறைவானதாக குற்றம் சாட்டுவதற்கான விருப்பத்தை நாங்கள் வழங்குகிறோம்” என்று கூறியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் விசா காலம் முடிந்தும் அமீரகத்தில் தங்கினால், அவர்களுக்கு ஸ்பான்சர் செய்த ஏஜென்சி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் அபராதம் மட்டுமல்லாமல் அவர்களின் விசா விண்ணப்ப போர்ட்டல்களும் புதிய விசா விண்ணப்பம் செய்வதற்கு தடுக்கப்படலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பயண முகவர்கள், அவர்கள் ஸ்பான்சர் செய்த ஒரு சுற்றுலாவாசி ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா செல்லுபடி முடிந்தும் அதிகமாகத் தங்கியிருந்தால், புதிய விசாக்களுக்கான விண்ணப்பங்களை பயண முகவர்களின் போர்டல் ஏற்காது என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.