அமீரக செய்திகள்

2022ம் ஆண்டில் 15.9 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் போக்குவரத்தை பதிவு செய்த அபுதாபி விமான நிலையங்கள்..!!

அபுதாபி மீடியா அலுவலகம் (Abu Dhabi Media Office) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2022இல் அபுதாபியின் ஐந்து விமான நிலையங்களிலும் பயணிகளின் போக்குவரத்து முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டில் 5.26 மில்லியனை எட்டியிருந்த நிலையில், 2022-இல் அபுதாபி இன்டர்நேஷனல், அல் அய்ன் இன்டர்நேஷனல், அல் பதீன் எக்சிகியூட்டிவ், டெல்மா ஐலேண்ட் மற்றும் சர் பனி யாஸ் ஐலேண்ட் ஆகிய விமான நிலையங்களை மொத்தம் 15.9 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், அபுதாபியில் நடைபெற்ற உலக கார்கோ உச்சி மாநாட்டில் (World Cargo Summit) அறிவிக்கப்பட்ட இந்த முடிவுகள் ஐந்து விமான நிலையங்களில் உள்ள விமானப் போக்குவரத்து இயக்கங்கள் (ATMs) உட்பட வணிகத்தின் பிற முக்கிய பகுதிகளின் வளர்ச்சியை பற்றி விளக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காக பயணிக்கும் பயணிகளை கையாள்வதில் அபுதாபியில் உள்ள விமான நிலையங்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பதாகவும் அத்துடன் பிராந்திய மற்றும் சர்வதேச இடங்களுக்குச் செல்லும் மக்களுக்கு விருப்பமான விமான நிலையங்களாக மாறிவருவதால் அவற்றின் பிரபல நிலையை புள்ளிவிவரங்கள் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், CEO மற்றும் நிர்வாக இயக்குனரான ஜமால் சலேம் அல் தாஹேரி அவர்கள் அபுதாபிக்கு இது உண்மையிலேயே ஒரு உற்சாகமான நேரம் என்றும், இது போன்ற வாய்ப்புகள் விமானப் போக்குவரத்து மாற்றத்தினை அடிக்கோடிட்டு காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அபுதாபி மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையங்களில் சுமார் 583,949 டன் சரக்குகள் கையாளப்பட்டிருப்பது பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டிலுமே ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்களை காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 2022 நிலவரப்படி, அபுதாபி சர்வதேச விமான நிலையம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானச்சேவைகளை வழங்கிவரும் நிலையில், வளர்ந்து வரும் 28 விமான நிறுவனங்களின் நெட்வொர்க்குகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!