அமீரக சட்டங்கள்

துபாயில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகள் என்ன.? அமலுக்கு வந்த புதிய சட்டம்..!!

துபாயில் வசிக்கக்கூடிய முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால் அதற்கான சிவில் திருமண சான்றிதழ்களை இனிமேல் வெறும் 24 மணி நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. இருப்பினும், துபாயில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்த பெடெரல் ஆணைய சட்டத்தின் படி, திருமணத்திற்காக விண்ணப்பிக்கும் தம்பதிகள் முறையாக சான்றளிக்கப்பட்ட அவர்களது ஆவணங்களை PDF வடிவிலும், அத்துடன் அவர்களுடைய ஒரிஜினல் ஐடிகளையும் வைத்திருந்தால் அவர்களுக்கு 24 மணிநேரத்தில் திருமண சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

முஸ்லீம் அல்லாத வெளிநாட்டினருக்கான குடும்ப வழக்குகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும், அமீரகத்தின் புதிய கூட்டாட்சி தனிநபர் நிலைச் சட்டத்தின் படி (Federal Personal Status Law) துபாயில் திருமணம் செய்து கொள்ளும் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு விரைவான சேவையை வழங்குவதற்காகவும் ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கான சிவில் திருமணம்’ என்ற சேவையை துபாய் நீதிமன்றங்கள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.

மேலும் திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமை உள்ளிட்ட 7 பக்கங்களைக் கொண்ட இந்த புதிய கூட்டாட்சி தனிநபர் நிலைச் சட்டமானது, அமீரகத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினரின் திருமண நிலைகள், நீதிமன்றங்களுக்கு முன் திருமண ஒப்பந்தம் மற்றும் ஆவணப்படுத்தல் நடைமுறை மற்றும் இணைந்து அல்லது ஒருதலைப்பட்சமாக தொடங்கக்கூடிய விவாகரத்து போன்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. .

அதுபோல, விவாகரத்துக்குப் பின்பு நிதி உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளையும், குழந்தைகளுக்கான கூட்டுக் காவல் ஏற்பாடுகளையும் இந்த புதிய சட்டம் ஒழுங்குபடுத்தியுள்ளது. எனினும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் நிலையில் மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்கள் சிவில் முறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அல்லாதவர்கள் துபாயில் திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகள் என்ன?

— திருமண ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் (கணவன் மற்றும் மனைவி) முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

— அவர்களின் வயது 21 வயதுக்கு குறைவாக இருத்தல் கூடாது.

— இருவரில் யாரேனும் ஒருவருக்கு துபாய் எமிரேட்டில் வசிப்பதற்கான இருப்பிடம் இருக்க வேண்டும்.

— அவர்கள் தனிநபர் (Single) என்பதை நிரூபிக்க வேண்டும்

— அவர்களோ அல்லது அவர்கள் சார்பாக செயல்படும் வேறு ஒரு நபரோ கட்டாயம் இருக்க வேண்டும்.

— இருவருக்கும் ஒரிஜினல் ஐடி இருத்தல் வேண்டும். அத்துடன் அனைத்து மின்னணு ஆவணங்களும் PDF வடிவத்தில் இருக்க வேண்டும்.

— அமீரக நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ மொழிபெயர்ப்பின் மூலம் ஆவணங்களின் மொழிகள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

— ஆவணங்கள் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தால் முறையாக சான்றளிக்கப்பட வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!