அமீரக செய்திகள்

துபாயில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய கோடைமழை..!! தூசியுடன் மேகமூட்டமான வானிலை நிலவும் என NCM அறிவிப்பு..!!

கடந்த சில நாட்களாகவே அமீரகத்தில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த இரு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் துபாயில் பிற்பகலில் தூசியுடன் கூடிய காற்று வீசியதாகவும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எமிரேட்ஸ் ரோடு, துபாயின் அல் மர்மூம் பகுதி, தேரா, அல் குத்ரா மற்றும் அல் பராரி ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுபோல, ஷார்ஜா எமிரேட்டிலும் அல் ஹியார் மற்றும் அல் ஷிவைப் பகுதிகளில் மழைப் பதிவாகியுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் சாலைகளில் கவனமாக செல்லவும், அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

 

வானிலை அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜெபல் அலி-லெஹ்பாப் சாலையில், ஆலங்கட்டி மழை பெய்தது என கூறப்பட்டுள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாக அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, NCM வெளியிட்ட வானிலை முன்னறிக்கையின்படி, வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால், கிழக்குப் பகுதிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அமீரகம் முழுவதும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

அதேசமயம், துபாய் மற்றும் அல் அய்னில் சனிக்கிழமை இரவு 8 மணி வரை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை NCM அறிவித்துள்ளது. இந்த வானிலை ஆகஸ்ட் 8 வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அத்துடன் அமீரகத்தின் சில பகுதிகளில் மணிக்கு 10-25 கிமீ வேகத்தில் மிதமான முதல் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சில சமயங்களில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடலின் நிலைமை ஓரளவுக்கு அமைதியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!