அமீரக செய்திகள்

கனமழை பாதிப்பால் மூடப்பட்ட 4 மெட்ரோ நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் தேதியை அறிவித்த RTA..!!

அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி வரலாறு காணாத மழை பெய்ததில் துபாயில் உள்ள பல மெட்ரோ நிலையங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் தினமும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை அளித்து வரும் துபாய் மெட்ரோ சேவையும் கடும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், எமிரேட்டைத் தாக்கிய கனமழைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான பல மெட்ரோ நிலையங்கள் சரிசெய்யப்பட்டு மெட்ரோ சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும், துபாய் மெட்ரோவின் ரெட் லைன் வழித்தடத்தில் உள்ள ஆன் பேசிவ் (Onpassive), ஈக்விட்டி (Equity), மஷ்ரிக் (Mashreq) மற்றும் எனர்ஜி (Energy) ஆகிய நான்கு மெட்ரோ நிலையங்கள் மிகவும் சேதமடைந்ததால் தற்போது வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நான்கு மெட்ரோ நிலையங்களும், மீண்டும் திறக்கப்படவுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மே 28ம் தேதிக்குள் இந்த மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டு துபாய் மெட்ரோ தனது இயல்பான செயல்பாடுகளை மீட்டெடுக்கும் என RTA தெரிவித்துள்ளது.

RTA இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது வரை மூடப்பட்டிருக்கும் ஆன் பேசிவ், ஈக்விட்டி, மஷ்ரிக் மற்றும் எனர்ஜி மெட்ரோ நிலையங்கள் “உயர்ந்த தரம் மற்றும் செயல்திறனுடன் செயல்படத் தயாராக உள்ளன” என்பதை உறுதிப்படுத்த அனைத்து பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு மீண்டும் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிசினஸ் பே முதல் ஆன் பாஸிவ், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், மஷ்ரிக், ஈக்விட்டி, துபாய் இன்டர்நெட் சிட்டி மற்றும் அல் கைல் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் 150 பேருந்துகள், பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து சேவை செய்யும் என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!