அமீரக செய்திகள்

UAE: அந்த மனசு தான் சார் கடவுள்!! – நாடு திரும்ப பணமின்றி தவித்த சுற்றுலா பயணிக்கு ஷார்ஜா காவல்துறையினர் செய்த மனிதாபிமான உதவி..

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா வந்து நாடு திரும்ப கையில் போதிய பணம் இல்லாமல் சிக்கித் தவித்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ஷார்ஜா காவல்துறையினர் மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டியதால், அவர் தனது தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

இது குறித்து ஷார்ஜா காவல்துறையினர் அளித்துள்ள தகவல்களின்படி, விமான நிலைய சாலையில் ரோந்து சென்றபோது, ​​ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாலத்தின் கீழ் சுற்றுலாப்பயணி ஒருவர் அமர்ந்திருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அப்போது அவர் மிகவும் சோர்வாக பரிதாபமான நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பிறகு, காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்த போது, கடந்த ஏப்ரல் மாதம் அமீரகத்தைச் சுற்றிப் பார்க்க அவர் வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இங்கு வந்த பின்னர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல போதிய பணம் இல்லாமல் சிக்கித் தவித்துள்ளார். மேலும், அவருக்கு ஆங்கில மொழி சரிவரப் பேசத் தெரியாத காரணத்தினால், அவரது பிரச்சினைகளைத் தெளிவாக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமலும் தவித்துள்ளார்.

அவரது இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த ஷார்ஜா காவல்துறையினர், உடனடியாக அவருக்கு ஹோட்டல் அறையை பதிவு செய்து, அவரை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் விமானத்திற்கு டிக்கெட் வாங்கிய பின்னர் அவரை ஷார்ஜா விமான நிலையத்திற்கும் அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.

அந்த சுற்றுலாப்பயணி தனக்கு இது நடந்ததை நம்ப முடியவில்லை என்று கூறியதாக காவல்துறையினர் மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் உதவிக்கு நன்றி தெரிவித்த அவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான செயல்பாடுகளால் மிகவும் தான் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த நாடு எனக்கு வழங்கியதைக் கண்டு நான் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டேன். அதன் மக்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். ஷார்ஜாவிலும், பரந்த ஐக்கிய அரபு அமீரகத்திலும் பல தேசங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும் இங்கு இனவெறி இல்லை” என்று அவர் கூறியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இது மிகவும் அரிதானது என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தை நேசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் நாட்டின் அழகிய இடங்களுக்குச் சென்று, பல கலாச்சாரங்கள் எவ்வாறு இணைந்து வாழ முடியும் என்பதை அனைவரும் நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்று அவர் கூறியதாகவும் காவல்துறை அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!