அமீரக செய்திகள்

அபுதாபியைத் தொடர்ந்து டெஸ்லா கார்களை டாக்ஸிகளாக அறிமுகப்படுத்தவுள்ள மற்றொரு எமிரேட்..!!

புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் கார்பன் உமிழ்வைக் குறைக்க உலகம் முழுவதும் சர்வதேச நாடுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கார்பன் உமிழ்வானது எரிபொருளில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறுவதால் மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் நடவடிக்கைகள் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மானில் பொதுப் போக்குவரத்து டாக்ஸி சேவையில் புகழ்பெற்ற டெஸ்லா கார்களை சேர்க்க உள்ளதாக அஜ்மான் பொதுப் போக்குவரத்து ஆணையம்(Ajman Public Transportation Authority – APTA) தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், டாக்ஸிகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் நாட்டின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டெஸ்லா கார்கள் டாக்ஸி சேவையில் சேரவுள்ளதாக அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் சூரிய சக்தியில் இயங்கும் வாகன நிறுத்துமிடங்களைக் கொண்ட 24 பேருந்து நிறுத்தங்களையும் நிறுவ உள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​APTA இன் பொது போக்குவரத்து மற்றும் உரிமம் வழங்கும் முகமையின் நிர்வாக இயக்குனர் பொறியாளர் சாமி அல் ஜல்லாஃப் அவர்கள், பொது போக்குவரத்து துறையில் நிலையான முயற்சிகளை மேம்படுத்துவதற்கு ஆணையம் முயற்சித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அஜ்மான் எமிரேட்டில் 2016 ஆம் ஆண்டு முதல் டாக்ஸிகள் துறையில் இயங்கும் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக சுமார் 15 மில்லியன் திர்ஹம்களை ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், நடப்பு ஆண்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த டாக்ஸிகளின் விகிதம் மொத்த டாக்ஸிகளின் எண்ணிக்கையில் 81 சதவீதத்தை எட்டியுள்ளதால், அனைத்து டாக்ஸிகளையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களாக மாற்றுவதை APTA இன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அல் ஜல்லாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அரேபியன் டாக்ஸி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஷேக் சயீத் பின் மஜித் அல் காசிமி அவர்கள் கூறுகையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய டெஸ்லா டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

எரிபொருளால் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான கார்பன் வாயுவினால், சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களிடமிருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஓசோன் படலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் அஜ்மானின் போக்குவரத்து அமைப்பில் அதன் பயன்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கான ஆணையத்தின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அல் ஜல்லாஃப் மதிப்பாய்வு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், சுத்தமான மாற்று எரிபொருள் ஆற்றல்களை டாக்ஸிகளில் பயன்படுத்துவதையும், இயற்கை எரிவாயு, மின்சாரம், ஹைட்ரஜன் மற்றும் ஹைபிரிட் முறையில் இயங்கக்கூடிய வாகனங்களை டாக்ஸிகளில் பயன்படுத்துவதையும் APTA நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அல் ஜல்லாஃப் கூறியுள்ளார். அதுபோல, பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்தை வழங்குவது சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பங்களிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!