அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று ரமலான் பிறை பார்க்கப்படும் என பிறை பார்க்கும் கமிட்டி அறிவிப்பு..!!!

ரமலான் மாதம் துவங்கவிருப்பதை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று, (செவ்வாய்க்கிழமை, மார்ச் 21) ரமலான் பிறை தென்படுகிறதா என பார்க்கப்படும் என்று அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு ரமலான் மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்க, இன்று மக்ரிப் (சூரியன் மறைவு) தொழுகைக்குப் பிறகு, நாட்டின் பிறை பார்க்கும் குழு ஒன்று கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து ஷரியா நீதிமன்றங்களும் இன்று பிறை தென்படுகிறதா என தேடி, அதைக் கண்டால் குழுவிடம் தெரிவிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பிறை பார்க்கும் குழுவானது அபுதாபி நீதித்துறையில் கூடும் என்றும் சட்ட அமைச்சர் அப்துல்லா சுல்தான் பின் அவாத் அல் நுவைமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று பிறை காணப்பட்டால், ரமலான் மாதம் நாளை (மார்ச் 22 புதன்கிழமை) தொடங்கும். இல்லையென்றால், மார்ச் 23, வியாழன் அன்று ரமலான் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின் படி இந்த வருட ரமலான் மாதம் மார்ச் 23 வியாழக்கிழமை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம். வானியல் கணக்கீடுகளின்படி, இது இந்த ஆண்டு 29 நாட்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகின்றது. இதன்படி பார்த்தால் ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 21 அன்று இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அமீரகத்தில் இந்த வருடம் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே ரமலான் மாதம் 29 நாட்களுடன் முடிவடைந்தால் நான்கு நாட்கள் விடுமுறையும், 30 நாட்களுடன் முடிவடைந்தால் ஐந்து நாட்கள் விடுமுறையும் குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!