அமீரக செய்திகள்

மே 1 முதல் அமல்.. துபாய்-அபுதாபி சாலையில் மெதுவாக சென்றால் 400 திர்ஹம் அபராதம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முறையாக எதிர்வரும் திங்கள்கிழமை (மே 1) முதல் துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையே உள்ள முகமது பின் ரஷித் சாலையில் குறைந்தபட்ச வேக வரம்பை விட குறைவான வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து சாலையின் இரண்டு இடதுபுற பாதைகளில் இந்த புதிய வேக வரம்பு அபுதாபி காவல்துறையால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரு திசைகளிலும் குறைந்தபட்சம் 120கிமீ/மணி வேகம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வரம்புக்குக் கீழே வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வந்துள்ளன.

ஆகவே, இனி வரும் வாரங்களில் குறைந்தபட்ச வேக வரம்புக்கும் குறைவான வேகத்தில் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி காவல்துறை அமீரக குடியிருப்பாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நினைவூட்டியுள்ளது.

குறிப்பாக, சாலை பாதுகாப்பை உறுதி செய்வதையும், மெதுவாக செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனனகள் வலதுபுறம் உள்ள பாதைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த புதிய வேக வரம்புகள் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

அதுபோல, கனரக வாகனங்கள் செல்லும் வலதுபுறப் பாதையிலும், வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது பாதையிலும் இந்த குறைந்தபட்ச வேகம் பொருந்தாது எனவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அமீரகத்தின் தலைநகரான அபுதாபியையும் துபாயையும் இணைக்கும், இரு புறமும் நான்கு வழிச்சாலைகளை கொண்ட இந்த முகமது பின் ரஷித் சாலையின் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 140 கிமீ ஆகும்.

மேலும், இந்த புதிய வேக வரம்பிற்கான அபராதம் குறித்து அபுதாபி காவல்துறை நடத்திய ஆன்லைன் கருத்துக்கணிப்பில் பதிலளித்த 3,400 க்கும் மேற்பட்டவர்களில் 78 சதவீதம் பேர், இதற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!