ஷார்ஜாவில் 17வது மாடியில் இருந்து தவறி விழுந்த இந்திய சிறுமி உயிரிழப்பு..!!

ஷார்ஜாவில் உள்ள அல் நஹ்தா பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று 12 வயது சிறுமி தனது குடியிருப்பு கட்டிடத்தின் 17 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரின் தாயார் இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்றும் தெரிய வந்துள்ளது. சிறுமியின் தந்தை தற்போது இந்தியாவில் இருக்கும் நிலையில், சிறுமியின் தாயார் பள்ளியில் இருந்து வீடு திரும்பியிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. சமூக சேவகர் அஷ்ரப் வடனப்பிள்ளி கூறுகையில், குழந்தையின் சடலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “எங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் கிடைத்தன, மேலும் உடல் நேற்று சனிக்கிழமை காலை அடக்கம் செய்ய இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் உள்ள அல் காசிமியா மருத்துவமனை வெளியிட்டுள்ள இறப்பு அறிக்கையின்படி, கீழே விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுமி இறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் சிறுவர்கள் குடியிருப்புக் கட்டிடத்தின் பால்கனியில் இருந்து விழும் சம்பவமானது தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வை அதிகாரிகளும் காவல்துறையும் தொடர்ந்து குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர். மேலும் கீழே விழுந்து இறந்ததில் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிறுவர்களின் உயிரிழப்பில் இதுவே முதல் சம்பவம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதே போல் கடந்த ஆண்டு, ஷார்ஜாவின் அல் மஜாஸ் பகுதியில் ஒரு அரபு சிறுவன் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். 2021 ஆம் ஆண்டில், 17 வயது சிறுமி தனது அடுக்குமாடி கட்டிடத்தின் 39 வது மாடியில் இருந்து விழுந்து இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.