அமீரக செய்திகள்

விசிட் விசாக்களுக்கான சலுகைக் காலத்தை நிறுத்திய துபாய் !! – ஒரு நாள் தவறினாலும் அபராதம்.. உறுதிப்படுத்திய டிராவல் நிறுவனங்கள்…

துபாயில் வழங்கப்படும் விசிட் விசாவில் நுழைந்து, அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பின்னரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்படும் சலுகைக் காலம் (grace period) நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய உத்தரவை அமீரகத்தில் இயங்கி வரும் டிராவல் ஏஜென்டுகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அமீரகத்தில் உள்ள டிராவல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்த செய்தியில், “துபாய் விசிட் விசாகளுக்கு இனி சலுகைக் காலம் இல்லை. விசாவின் வகையை பொறுத்து நாட்டில் தங்கும் காலம் 30 நாட்கள் அல்லது 60 நாட்களாக மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, விசிட் விசாவில் அமீரகத்திற்குள் நுழையும் பயணிகள், 30 நாட்கள் அல்லது 60 நாட்கள் என அவர்களின் விசிட் விசா காலத்திற்கேற்ப நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவர். இருப்பினும், அவ்வாறு வரும் பயணிகள் விசா காலம் முடிந்த பின்னரும் குறிப்பிட்ட காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற, அவர்களுக்கு சலுகைக் காலம் வழங்கப்படும். ஆனால் தற்போது வந்துள்ள அறிவிப்பின்படி, இனி அத்தகைய சலுகைக் காலமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அரேபியன் பிசினஸ் சென்டரின் செயல்பாட்டு மேலாளர் ஃபிரோஸ்கான் என்பவர் பேசுகையில், இதற்கு முன்பு துபாய் தவிர அனைத்து எமிரேட்களும் விசிட் விசாக்களுக்கான 10 நாள் சலுகைக் காலத்தை நீக்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். முதலில் துபாயில் வழங்கப்படும் விசாக்களுக்கு மட்டுமே சலுகை காலம் பொருந்தும். ஆனால் இப்போது  மே 15 முதல், துபாயில் உள்ள அதிகாரிகளும் சலுகைக் காலத்தை நீக்கியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, நாட்டிற்குள் நுழையும் பார்வையாளர்கள் அவர்களின் விசாக்கள் காலாவதியாகும் முன்னரே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், நாட்டை விட்டு வெளியேறாதவர்களுக்கு ஆவணம் காலாவதியான தேதியில் இருந்து அபராதம் கணக்கிடப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!