UAE வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது எப்படி? – உங்களுக்கான ஐந்து வழிகள் இதோ…

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்டாய வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் இன்னும் நீங்கள் சேரவில்லையா? நீங்கள் எளிதாக பதிவு செய்ய அமீரக அரசால் பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அது பற்றிய கூடுதல் தகவல்களையும், காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான வழிகளையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்தாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட, திடீரென வேலையை இழப்பவர்களுக்கான வேலையின்மை காப்பீட்டு திட்டமானது, ஒழுங்கற்ற நடத்தை அல்லது ராஜினாமா தவிர வேறு காரணங்களால் வேலையை இழக்கும் ஊழியர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வரை நிதிப் பாதுகாப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, வேலையை இழக்கும் ஊழியர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வரை நிதிப் பாதுகாப்பை வழங்கும் திட்டத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ஆன்லைன், பரிமாற்ற மையங்கள், கியோஸ்க்குகள், சேவை மையங்கள் மற்றும் ஆப் போன்ற ஐந்து தளங்கள் அமீரக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
1. நேரடி சேனல்கள் – ILOE இணையதளம் மற்றும் ஆப்:
உங்களது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிடைக்கும் ILOE போர்ட்டல் மற்றும் ILOE மொபைல் அப்ளிகேஷன் மூலம் வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் நேரடியாக மற்றும் இலவசமாக நீங்கள் பதிவு செய்யலாம். இந்த இரண்டு தளங்களும் துபாய் இன்சூரன்ஸால் இயக்கப்படுகிறது.
கட்டண சேனல்கள்: நேரடி ILOE சேனல்கள் தவிர்த்து துபாய் இன்சூரன்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ள தனியார் நிறுவனங்கள் இயக்கும் இதர சேனல்களும் ILOE இல் பதிவுபெறுவதற்கான சேவையை வழங்குகின்றன. இருப்பினும், இந்த சேனல்கள் சந்தாவுடன் கூடுதல் சேவைக் கட்டணங்களுக்கு உட்பட்டவை என்று ILOE இணையதளம் தெரிவித்துள்ளது.
2. பரிமாற்ற மையங்கள் (Exchange Centers):
இப்போது, நீங்கள் அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் மூலம் ILOE காப்பீட்டிற்கு குழுசேர்ந்து பணம் செலுத்தலாம். அதற்கு முதலில் மையங்களில் ஒன்றைப் பார்வையிட்டு பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்:
- உங்கள் எமிரேட்ஸ் ஐடி மற்றும் மொபைல் எண்ணை சமர்ப்பிக்கவும்.
- அதன் பிறகு, ILOE காப்பீட்டு படிவத்தை கோரி, உங்கள் பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுக்கவும் (ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள்)
- உங்கள் கட்டண விருப்பத்தைத் தேர்வு செய்யவும் – மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது முழு ஆண்டு. நீங்கள் பணம் செலுத்தியவுடன் அதிகாரப்பூர்வமாக திட்டத்தில் பதிவு செய்யப்படுவீர்கள் மற்றும் உங்கள் கட்டணத்தை உறுதிப்படுத்தும் ரசீதைப் பெறுவீர்கள்
3. கியோஸ்க்குகள் (Kiosks):
நீங்கள் கியோஸ்க் இயந்திரங்கள் மூலமாகவும் ILOE திட்டத்திற்கு குழுசேரலாம். தற்போதைய நிலவரப்படி, அதிகாரப்பூர்வ சந்தா சேனல்களான ‘MBME Pay’ மற்றும் ‘uPay’ என்ற இரண்டு வகையான கட்டணச் சேவை வழங்குநர்கள் உள்ளன. இவை நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ளன. எனவே, உங்கள் மொபைலில் உள்ள ஆன்லைன் மேப் மூலமாக ‘MBME Pay’ மற்றும் ‘uPay’ கியோஸ்க்கைத் தேடுவதன் மூலம் உங்களுக்கு அருகிலுள்ள கியோஸ்க்கை நீங்கள் அணுகலாம்.
4. வங்கி மொபைல் ஆப்கள்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட WPS முகவரான Edenred வழங்கும் C3Pay ஆப் அல்லது கார்டு மூலமாகவும் நீங்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய முடியும்.
5. தவ்ஜீஹ் மற்றும் தஷீல் சென்டர்கள்:
ILOE திட்டத்தில் சேர, தவ்ஜீஹ் அல்லது தஷீல் சேவை மையங்களையும் அணுகலாம். மனித வளங்கள் மற்றும் எமிராடிசேஷன் அமைச்சகத்தால் (MOHRE) இயக்கப்படும் இந்த சென்டர்கள், தனியார் துறையில் பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு தொழிலாளர் தொடர்பான சேவைகளை வழங்குகின்றன.
ஏற்கனவே கூறியபடி, திட்டத்தில் சேர உங்கள் எமிரேட்ஸ் ஐடி மற்றும் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். மேலும், https://www.mohre.gov.ae/en/services/approved-services-centers.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள MOHRE சேவை மையங்களைக் கண்டறியலாம்.
காப்பீட்டுத் திட்டத்தில் முதலாளிகள் தொழிலாளர்களை பதிவு செய்ய முடியுமா?
புதிய வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் தொழிலாளர்களைப் பதிவு செய்ய முதலாளிகளுக்கு அனுமதி உண்டு. அதாவது, இரு தரப்பினர் இடையே பரஸ்பர ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே ஒரு முதலாளி தனது ஊழியர்களை காப்பீட்டுக் கொள்கையில் பதிவு செய்ய முடியும். எவ்வாறாயினும், காப்பீட்டுக்கான செலவை பணியாளர் ஏற்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
காப்பீட்டுக்கான கட்டணம் மற்றும் அபராதம்:
MOHRE இன் படி, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் என்ற விகிதத்தில் மாதாந்திர அடிப்படையில் காப்பீட்டு இழப்பீடு கணக்கிடப்படுகிறது மற்றும் வேலையின்மை தேதியிலிருந்து அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு இழப்பீடு சம்பளம் வழங்கப்படும்.
அதுமட்டுமில்லாமல், உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் திட்டத்திற்கு குழுசேரத் தவறினால், 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, காப்பீட்டு பிரீமியங்களைச் செலுத்தத் தவறினால், காப்பீட்டுச் சான்றிதழ் ரத்துசெய்யப்பட்டு 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.