UAE: Botim ஆப் வழியாக இனி எதிஹாட் ஏர்வேஸ் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்!! – கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து…
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனத்தில் ஒன்றான எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் துபாயை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான அஸ்ட்ரா டெக் ஆகியவை, இலவச காலிங் செயிலியான போடிம் (Botim) ஆப் மூலம் விமான முன்பதிவுகளை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அரேபியன் டிராவல் மார்க்கெட்டில் எதிஹாட் ஏர்வேஸ் CEO அன்டோனால்டோ நெவ்ஸ் மற்றும் அஸ்ட்ரா டெக்கின் நிறுவனர் அப்துல்லா அபு ஷேக் ஆகியோருக்கு இடையே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்வதற்கான இந்த கூட்டு ஒப்பந்தம், எதிஹாட் மற்றும் அஸ்ட்ரா டெக் நிறுவனத்தின் உயரதிகாரிகள்முன்னிலையில் கையெழுத்தானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து எதிஹாட் ஏர்வேஸ் CEO நெவ்ஸ் தெரிவிக்கையில், அஸ்ட்ரா டெக் உடனான இந்த புதிய ஒப்பந்தம் எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது, ஏனெனில் இது Botim இல் விமான முன்பதிவுகளை தொடங்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்று கூறியுள்ளார். மேலும், நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் உரையாடுவதற்கும், தொடர்பு கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் இந்த செயலியில் விமான முன்பதிவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், எதிஹாட் போடிம் செயிலியின் ஒரு பகுதியாக மாறுவதாகவும், இது வாடிக்கையாளர்கள் தளத்தை விட்டு வெளியேறாமல் விமானங்களை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அஸ்ட்ரா டெக் உருவாக்கிய Botim GPTயில் விமானங்கள் மற்றும் பிற பயணம் தொடர்பான சேவைகள் சேர்க்கப்படுவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு Etihad விமானங்களை முன்பதிவு செய்ய புதுமையான வழியை இந்த மொபைல் ஆப் வழங்குகிறது. அதுபோல, புதிய கட்டணம் தொடர்பான சேவைகளை செயலியில் ஒருங்கிணைப்பது வாடிக்கையாளர்களுக்கான முன்பதிவு செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது.
அதுமட்டுமின்றி, எதிஹாட் ஏர்வேஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்க, GPT-இயக்கப்பட்ட விமான முன்பதிவு போன்ற புதுமையான தீர்வுகளை பின்பற்றுவதன் மூலம், தொடர்ந்து உருவாகி வரும் டிஜிட்டல் செயல்பாடுகளில் முன்னணியில் இருக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் நெவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அஸ்ட்ரா டெக் நிறுவனர் அபு ஷேக் கூறுகையில், Botim ஆப் பயனர்கள் இதுவரை பார்த்திராத புதிய அம்சங்களை இந்த கூட்டு ஒப்பந்தம் உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு கேள்வியைக் கேட்பது போல விமானங்களை முன்பதிவு செய்யும் செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், நாங்கள் விமான முன்பதிவில் புரட்சியை ஏற்படுத்துகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், fintech, e-commerce, GPT மற்றும் தகவல் தொடர்புகளை இணைப்பதன் மூலம் அதன் பயனர்களுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய டிஜிட்டல் தளமாக அஸ்ட்ரா டெக்கின் புதிய வெர்ஷனான Botim 3.0 மொபைல் அப்ளிகேஷன் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.