வளைகுடா செய்திகள்

குவைத்: இன்று முதல் ஆரம்பித்த கொரோனா தடுப்பூசி பிரச்சாரம்.. முதல் நபராக தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர்..!!

கொரோனாவிற்கான தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள குடிமக்கள், குடியிருப்பாளர்கள் என அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என குவைத் அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல் கட்டமாக இந்த வார தொடக்கத்தில் கொரோனாவிற்கு எதிரான 150,000 ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் (Pfizer-BioNTech vaccine) குவைத்தை வந்தடைந்துள்ளன.

அதனை தொடர்ந்து குவைத்தில் இன்று முதல் கொரோனாவிற்கான தடுப்பூசி பிரச்சாரமானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அவர்கள் குவைத் நாட்டின் முதல் நபராக கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டு தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக முழு உலகமும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அதற்கான தீர்வை இந்த தடுப்பூசி வழங்கும்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியானது இரண்டு டோஸ்களாக (Dose) செலுத்தப்படும் என்பதால் முதல் டோஸினைப் பெற்ற எவரும் அடுத்த டோஸினைப் பெறும் முன் குவைத்தை விட்டு செல்ல வேண்டாம் எனவும், பயணம் செய்ய விரும்புபவர்கள் இரண்டு டோஸ்களையும் பெற்ற பின்னர் பயணித்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது குவைத்திற்கு வந்திருக்கும் தடுப்பூசிகளின் மூலம் 75,000 நபர்கள் தடுப்பூசியினை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மேற்கொள்ளப்படும் இடத்தை பார்வையிட்ட குவைத் சுகாதார அமைச்சர் டாக்டர் பசில் அல் சபா அவர்கள், அடுத்தடுத்த கட்டமாக கூடுதல் தடுப்பூசிகள் குவைத்திற்கு பின்னர் வரும் என்றும், இந்த தடுப்பூசி பிரச்சாரம் ஒரு வருடம் வரை இயங்கும் என்றும் கூறியுள்ளார். எவ்வித விதி விலக்கும் இல்லாமல் குவைத்திலுள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் வரை இந்த தடுப்பூசி பிரச்சாரம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் அடுத்த கட்டமாக ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மற்றும் பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளிலிருந்து 450,000 டோஸ்கள் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் குவைத்துக்கு வரும் என்று அந்நாட்டின் செய்தித்தாள் நிறுவனம் (Al Anba) தெரிவித்துள்ளது. இதன் மூலம் 225,000 குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டு பயனடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, குவைத்தில் 83,000 நபர்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!