வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம்.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் கடந்த வாரம் நிலவிய மோசமான வானிலையை தொடர்ந்து, தற்போது சவுதி அரேபியாவும் சீரற்ற வானிலையால் பாதிப்படைந்து வருகிறது. இதன் காரணமாக ராஜ்ஜியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இஸ்லாமியர்களின் புனித நகரங்களில் ஒன்றான மதீனாவிலும் பரவலாக மழை பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதியிலும் கனமழை பெய்துள்ளது. எனினும் வழிபாட்டாளர்கள் கனமழையையும் பொருட்படுத்தாமல் தொழுகையில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல்களின் படி, மதீனா பகுதியில் உள்ள அல் ஈஸ் கவர்னரேட்டில் கடுமையான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக அங்குள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் நீரோடைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு வாகனங்களை மூழ்கடித்ததுடன், சாலை உள்கட்டமைப்பையும் சேதப்படுத்தியுள்ளது.

இத்தகைய வானிலை இடையூறுகளுக்கு மத்தியில், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும், விவசாய சாலைகளில் பயணிக்கும் போது விழிப்புடன் இருக்குமாறும் சவூதி குடிமைத் தற்காப்பு இயக்குநரகம் மதீனா பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சவூதி தேசிய வானிலை ஆய்வு மையம் மதீனா பகுதியில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் அதிவேக காற்றுடன் கூடிய அதிக மழை என வானிலை மேலும் தீவிரமடையும் என்று கணித்துள்ளதால், அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. அத்துடன் மோசமான வானிலை ராஜ்யம் முழுவதும் பல்வேறு பகுதிகளை தொடர்ந்து பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று அமீரகத்திலும் வரும் நாட்களில் நிலையற்ற வானிலைக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அமீரகத்தில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மோசமான வானிலை நிலவும் எனவும், இதனால் நாட்டில் கனமழை பெய்யும் எனவும் தேசிய வானிலை மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!