அமீரக செய்திகள்

UAE: இனி உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கலாம்!! – நிபந்தனைகளை வெளியிட்ட ICP..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியில் இருந்தும் தனிநபர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் சேவையை சமீபத்தில் அமீரக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும்பாலானோர் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த மாற்றத்தை அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் ஆணையம் (ICP) அறிமுகப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் சேவையைப் பெறுவதற்கு ஒரு முக்கியமான நிபந்தனை உள்ளது. அதாவது, விண்ணப்பதாரர் தனிப்பட்ட முறையில் ஆணையத்தின் பிரத்யேக ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இந்த செயல்முறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து அரேபிய செய்தி நாளிதழான Emarat AlYoum வெளியிட்ட செய்தியின் படி, வெளிநாட்டில் இருந்து எமிரேட்ஸ் ஐடி கார்டுகளை புதுப்பிக்க ஆணையம் இப்போது அதன் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் புதுப்பித்தல் சேவையை பிரத்தியேகமாக வழங்குவதாக அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மேலாண்மை இயக்குனர் நாசர் அகமது அல்-அப்துலி என்பவர் கூறியதாக தெரியவந்துள்ளது.

அதேசமயம், டைப்பிங் சென்டர்கள் மூலமாகவோ அல்லது நாட்டிற்குள் உள்ள வேறு ஒரு தனிநபராலோ கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அந்த நபர் அமீரகத்திற்கு வெளியே இருப்பது கண்டறியப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை வெளிநாட்டில் இருந்து அடையாள அட்டைகளைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ‘நூர் துபாய்’ வானொலிக்கு அளித்த நேர்காணலின் போது அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அமீரகத்திற்கு வெளியே வசிப்பவர்கள் தங்கள் மொபைல் போன்களிலேயே ஐடியை புதுப்பிப்பதற்கான சேவையைத் தேர்ந்தெடுத்து, தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, கட்டணத்தைச் செலுத்தி மற்றும் பரிவர்த்தனையை தடையின்றி முடிக்கலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அத்துடன் ஆவணங்களுக்காக புகைப்படம் எடுக்கும் போது, ​​வழிகாட்டுதல்களை குறிப்பாக  உத்தியோகபூர்வ ஆடைக் குறியீட்டை (official dress code) கடைபிடிக்குமாறு அல்-அப்துலி வலியுறுத்தியுள்ளார். விண்ணப்பதாரரின் வயதைப் பொருட்படுத்தாமல், அவர்களின் ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட புகைப்படங்களை ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டிய குறிப்பிட்ட வரம்புகள் பற்றியும் நேர்காணலின் போது அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.

மேலும், தங்கள் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, பணம் செலுத்துவதற்கு முன் இ – படிவத்தில் உள்ளிடப்பட்ட தரவின் சரியான தன்மையையும், கூடுதலாக, மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி மற்றும் இ-படிவத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விருப்பமான டெலிவரி முறைகளின் துல்லியத்தை சரிபார்த்துக் கொள்ளுமாறும் அவர் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!