அமீரக செய்திகள்

அமீரகத்தில் அடுத்து வரக்கூடிய நீண்ட விடுமுறைகள் எப்போது என தெரியுமா..?? இத படிங்க..!!

இந்தியாவிலிருந்து கடல் கடந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்து இங்கே பணிபுரிய கூடிய நம்மை போன்ற பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையில் கிடைக்கக்கூடிய அந்த ஒரு நாள் விடுமுறையை எதிர்பார்த்தே அந்த வாரம் முழுவதையும் கடந்து வருகிறோம். இதில் நமக்கு எதிர்பாராத விதமாக வார நாட்களில் ஏதேனும் ஒரு விடுமுறை வந்துவிட்டால் அது நமக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும். அதிலும் அந்த விடுமுறை வார இறுதி நாட்களோடு சேர்ந்தோ அல்லது நீண்ட விடுமுறை நாட்களாக அமைந்தாலோ நமக்கு அது ஒரு பெரும் ஆனந்தத்தை வழங்கும் என்றால் அது மிகையல்ல.

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்து எந்த சிறப்பு விடுமுறையும் இல்லாமல் காத்துக்கிடந்த அரசு மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளிலும் பணிபுரியக்கூடிய பெரும்பாலோனோருக்கு முத்தாய் அமைந்த ஐந்து நாட்கள் ஈத் அல் பித்ர் விடுமுறை பெரும் மகிழ்ச்சியாய் அமைந்தது. இதனை தொடர்ந்து அமீரகத்தில் அடுத்து வரக்கூடிய நீண்ட விடுமுறை நாட்களும் நம் அனைவைரையும் மீண்டும் சந்தோசத்தில் ஆழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2021-2022 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் தனியார் துறைகளுக்கான ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விடுமுறை நாட்களின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, அமீரக குடியிருப்பாளர்கள் நடப்பு ஆண்டான 2021 ஆம் ஆண்டில் குறைந்தது மூன்று முதல் ஆறு நாட்கள் வரை இருக்கக்கூடிய மேலும் நான்கு நீண்ட விடுமுறை நாட்களை எதிர்பார்க்கலாம்.

– ஈத் அல் அத்ஹா பெருநாள்

ஈத் அல் பித்ர் பெருநாளுக்கு அடுத்து இசுலாமியர்கள் கொண்டாடும் அடுத்த பெருநாளான ஈத் அல் அத்ஹா, ஜூலை மாதம் 20 ம் தேதி செவ்வாய்க்கிழமையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரேபிய காலண்டரின் படி துல் ஹஜ் மாதம் 10 முதல் 12 வரை, அதாவது ஆங்கில மாத கணக்கில் ஜூலை 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் விடுமுறையை அமீரக அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஜூலை 20 க்கு முந்தைய நாளான ஜூலை 19 ஆம் தேதி (அரேபிய காலண்டரில் துல் ஹஜ் 9) அரபா தினமாக கருதப்படும். அந்த நாளிலும் பொதுவாகவே பொது விடுமுறை அளிக்கப்படும். அவ்வாறு இருப்பின் இந்த வருடத்தின் ஈத் அல் அத்ஹா விடுமுறை ஜூலை 19 திங்கள்கிழமை தொடங்கி ஜூலை 22 வியாழக்கிழமை வரை நீடிக்கும். அதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என்பதால், திங்கள் முதல் வெள்ளி வரை (ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை) என மீண்டும் ஐந்து நாட்கள் நீண்ட விடுமுறையை அமீரக குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம். (எனினும் பிறை பார்ப்பதன் அடிப்படையில் இந்த விடுமுறை நான்கு நாட்களாக குறையவும் வாய்ப்புண்டு)

சனிக்கிழமை பொது விடுமுறை உள்ளவர்கள் இந்த ஈத் அல் அத்ஹா விடுமுறையை ஜூலை 19 முதல் ஜூலை 24 வரை என ஆறு நாட்கள் நீண்ட விடுமுறையாக கொண்டாடுவர்.

– ஹிஜ்ரி புத்தாண்டு

இஸ்லாமிய புத்தாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை துவங்குவதால் அந்த நாளில் அனைத்து துறையினருக்கும் பொது விடுமுறையை அமீரக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் மாதம் 12 முதல் ஆகஸ்ட் மாதம் 13 வரை) என இரு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். பொதுவாகவே சனிக்கிழமை விடுமுறையை அனுபவிப்பவர்களுக்கு மூன்று நாட்கள் (ஆகஸ்ட் மாதம் 12 முதல் ஆகஸ்ட் மாதம் 14 வரை) தொடர் விடுமுறையாக அமையும்.

– முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் (மீலாது நபி)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை வருவதால் இந்த விடுமுறையும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் மாதம் 21 முதல் அக்டோபர் மாதம் 22 வரை) என இரு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். சனிக்கிழமை விடுமுறை இருப்பவர்களுக்கு இதிலும் மூன்று நாட்கள் (அக்டோபர் மாதம் 21 முதல் அக்டோபர் மாதம் 23 வரை) தொடர் விடுமுறையாக அமையும்.

– வீரர்களின் நினைவு நாள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்

ஆண்டின் கடைசி விடுமுறையாக கருதப்படும் வீரர்களின் நினைவு நாள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தின விடுமுறையானது, டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி புதன்கிழமை முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் அனுசரிக்கப்படும். இதனால் மூன்று நாட்கள் நீண்ட விடுமுறை அமீரக குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கும். சனிக்கிழமையையும் சேர்த்தால் மொத்தம் நான்கு நாட்கள் (டிசம்பர் மாதம் 1 முதல் டிசம்பர் மாதம் 3 வரை) தொடர் விடுமுறை பொதுத்துறை மற்றும் சில தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!