துபாய்: மே 15ம் தேதியுடன் மூடப்படவுள்ள உலகின் மிகப்பெரிய ‘ஃபவுண்டைன் ஷோ’..!! கடைசி நிகழ்ச்சியைக் காண பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்த நிர்வாகம்..!!

துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய நீரூற்று காட்சி (fountain) இந்த வார இறுதியில் நிறுத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. துபாயின் பாம் ஜூமைராவில் இருக்கும் பிரபல தி பாயின்ட்டில் (The Pointe) உள்ள தி பாம் ஃபவுண்டேனில் (The Palm Fountain) நிகழ்ச்சிகள் நிறுத்தப்படவிருப்பதாகவும் இதன் இறுதி நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்பும் குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், மே 12 முதல் மே 14 வரை கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தி பாயின்ட்டி (the pointe) வெளியிட்டுள்ள அறிவிப்பில், காண்போரின் கண்களைக் கவரும் தி பாம் ஃபவுண்டன் வரும் திங்கட்கிழமை, மே 15 அன்றுடன் மூடப்படும் தெரிவித்துள்ளது. எனவே, வண்ணமயமான நிகழ்ச்சியை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து கண்டுகளிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள் என்றும் அதன் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த கண்கவர் நிகழ்ச்சி 2020 முதல் சுமார் மூன்று வருடங்களாக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது, மேலும் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவில் அமைந்துள்ள இந்த இடமானது 3,000 க்கும் மேற்பட்ட LED விளக்குகள், 7,500 முனைகள் மற்றும் 105 மீட்டருக்கு செல்லும் நீரூற்றுகளையும் கொண்டுள்ளது.
இங்கு பார்வையாளர்களை ஈர்க்கும் நடன நீரூற்றுகள் மட்டுமின்றி, சில நேரங்களில் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.