அமீரக செய்திகள்

துபாயில் ஆசையைத் தூண்டும் தள்ளுபடிகளை அறிவித்து மோசடி செய்த சைபர் குற்றவாளிகள்.. பர்கருக்காக 4,848 திர்ஹம் பணத்தை பறிகொடுத்த சம்பவம்!

துபாயில் குடியிருப்பாளர் ஒருவர் பர்கர், குளிர்பானம் மற்றும் வியாபார பொம்மைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்த போது மோசடிக்கு ஆளாகியுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. போலியான வலைதளத்தில் ஆர்டர் செய்து பணத்தை இழந்த அவர், இதுபோன்ற சைபர் மோசடிகளில் இருந்து மற்றவர்கள் உஷாராக இருக்கவும் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் கூறிய விவரங்களின் படி, பிரபல துரித உணவு (fast food) நிறுவனத்தின் உண்மையான வலைத்தளம் என்று நினைத்து பர்கர், குளிர்பானங்கள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளார். அதற்கான தள்ளுபடி சலுகையைத் தவிர்த்து அவர் ஆர்டர் செய்த பொருட்களுக்கான பில் 37 திர்ஹம்கள்தான். ஆனால் அவரிடம் இருந்து 4,848 திர்ஹம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆர்டர் செய்த உணவும் டெலிவரி செய்யப்படவில்லை.

கடந்த ஜூன் 26 அன்று, அவருக்கு ஃபாஸ்ட்ஃபுட் உணவகத்தில் இருந்து ஒரு பாப்-அப் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. மேலும் அதில், அன்றைய தினம் வாங்கும் பொருட்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. எனவே, பாதி விலை தள்ளுபடி என்பதைப் பார்த்ததும் சற்றும் யோசிக்காமல் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள அந்த நபர் முயற்சித்துள்ளார்.

இறுதியாக அவர் ஆர்டர் செய்த உணவுகளுக்கு 37 திர்ஹம் செலுத்த வேண்டும் என்பதால், ஆன்லைனில் அந்த தொகையை செலுத்தியுள்ளார். பின்னர், OTP ஐ உள்ளிட்டு காத்திருந்த போது, அவர் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்திருக்கிறார். ஆம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 4,848 திர்ஹம் மதிப்பிலான பரிவர்த்தனை செய்ததாக குறுஞ்செய்தியைப் பெற்றிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக காவல்துறை மற்றும் வங்கியிடம் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மோசடி செய்பவர்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு துபாய் காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ATM கார்டில் உள்ள CVV எண் மற்றும் OTP உள்ளிட்ட ரகசிய வங்கித் தரவை யாரும் யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதுபோல, எந்தவொரு இணையதள URLகளையும் (Uniform Resource Locator) இருமுறை சரிபார்த்து, பாதுகாப்பானதாக இல்லை என்பது தெரிந்தால் அவற்றை பின்தொடர வேண்டாம் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இந்நிலையில், தள்ளுபடி விளம்பரத்தைப் பார்த்து மோசடியில் விழுந்த அந்த நபர், தனக்கு நேர்ந்தது போல வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட வலைத்தளங்களிலிருந்து பொருட்களை மட்டுமே வாங்குமாறும் மற்ற குடியுருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

போலியான வலைத்தளங்களைக் கண்டறிவதற்கான சில குறிப்புகள்:

வாடிக்கையாளர்களின் ஆசையைத் தூண்டி, தள்ளுபடி, இலவசம் போன்ற சலுகைகளைத் தூண்டிலாய் பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகளின் மோசடி வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, ஒரு செய்தி மோசடியானதாக இருக்கலாம் என்பதற்கான பின்வரும் சில அறிகுறிகளைக் கவனிக்கலாம்.

  • மோசமான இலக்கணம்
  • வார்த்தைகளில் பிழை
  • அதிகாரத்தின் பெயரைக் காட்டாத அறியப்படாத எண் அல்லது ஐடி
  • பணம் செலுத்துவதற்கான லிங்க்
  • உடனே பணம் செலுத்துமாறு அனுப்பப்படும் மெஸ்சேஜ்

அடுத்தகட்ட நடவடிக்கை:

ஒருவேளை, நீங்கள் சந்தேகத்திற்குரிய அழைப்புகள், மோசடிகள் மற்றும் ஏதேனும் ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டால், உடனடியாக 901ஐ (துபாய் போலீஸ்) அழைத்து புகாரளிக்கவும் அல்லது அருகிலுள்ள ஸ்மார்ட் காவல் நிலையதிற்குச் செல்லவும். இல்லையெனில், ‘இ-கிரைம்’ மற்றும் துபாய் போலீஸ் இணையதளம் அல்லது ஸ்மார்ட் ஆப் மூலம் புகாரளிக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!