அமீரக செய்திகள்

துபாய்: நோல் கார்டைத் தொலைத்து விட்டால் பேலன்ஸ் தொகையை திரும்பப் பெற முடியுமா..?? உங்களுக்கான முழு விபரமும் இங்கே..!!

துபாயில் அடிக்கடி பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நீங்கள் கண்டிப்பாக நோல் கார்டு (Nol Card) எனும் பயணம் செய்வதற்கு கட்டணம் செலுத்துவதற்கான கார்டினை வைத்திருப்பீர்கள். அடிக்கடி அல்லது தினந்தோறும் பயணம் செய்யக்கூடிய நபராக இருந்தால் அந்த கார்டில் மாதந்தோறும் பயண்படும் வகையில் பெரிய தொகையை ரீசார்ஜ் செய்து வைத்திருக்கலாம்.

இந்த நிலையில் திடீரென அந்த நோல் கார்டைத் தொலைத்து விட்டால், அதிலிருந்த பேலன்ஸ் அனைத்தையும் இழந்து விடுவோம் என்று நினைப்பவர்களும் அல்லது Nol கார்டினை தொலைத்து விட்டு பேலன்ஸ் கட்டணம் எல்லாம் வீணாகிவிட்டதே என்று கவலைப்படுபவர்களும் நம்மில் சிலர் இருக்கலாம். ஆனால், அந்த கவலை இனி தேவையில்லை.

அதாவது, உங்களிடம் நீல நிற நோல் கார்டு அல்லது ‘தனிப்பயனாக்கப்பட்ட’ சில்வர் அல்லது கோல்ட் கார்டு இருந்து அது தொலைந்து விட்டால், அதில் இருந்த பேலன்ஸ் தொகையை மீட்டெடுக்க துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இந்த சேவையைக் கொண்டுவந்துள்ளது. அதாவது உங்கள் எமிரேட்ஸ் ஐடியுடன் நோல் கார்டை இணைப்பதன் மூலம் உங்களின் nol கார்டை தனிப்பயனாக்கலாம்.

ஒருவேளை, உங்களது நோல் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ முதலில் 8009090 என்ற எண்ணில் RTA வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, புகாரளிக்க வேண்டும் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பின்னர் புகாரளிக்கப்பட்டதும், நோல் கார்டு பிளாக் செய்யப்படும் என்றும் அதன்பிறகு, உங்களின் முந்தைய நோல் கார்டில் இருந்து புதிய கார்டுக்கு பேலன்ஸை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

நோல் கார்டு பேலன்ஸை எவ்வாறு திரும்பப் பெறுவது..??

1. https://rta.ae/ என்ற RTA வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கோ அல்லது https://www.rta.ae/wps/portal/rta/ae/ என்ற லிங்க் மூலம் நேரடியாக சென்றோ சேவையை அணுகலாம்.

2. அதில் உங்கள் நோல் டேக் ஐடியை உள்ளிடவும். வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளும் போது, ​​உங்களின் எமிரேட்ஸ் ஐடி எண்ணை சமர்ப்பித்தால், பிரதிநிதி உங்களின் நோல் டேக் ஐடி எண்ணை வழங்குவார்.

3. நோல் கார்டு பேலன்சை மாற்றுவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும். (தொலைந்தது, திருடப்பட்டது அல்லது காலாவதியானது ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு காரணம்).

4. அதன் பிறகு, உங்கள் nol கார்டிற்கான பின் நம்பரை உள்ளிடவும், அதை நீங்கள் SMS மூலம் பெறுவீர்கள்.

5. அடுத்தபடியாக, முழுப்பெயர், மொபைல் எண், எமிரேட்ஸ் ஐடி, வீட்டு முகவரி மற்றும் குடியுரிமை போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.

6. நோல் கார்டு பேலன்ஸைத் திரும்பப் பெறும் விண்ணப்பத்தின் விவரங்களை ஒருமுறை சரிபார்த்து விட்டு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை உறுதிசெய்து, கார்டு மாற்றுதலுக்கான சேவைக் கட்டணத்தைச் செலுத்தவும், இதற்கு 70 திர்ஹம் செலவாகும் என்று கூறப்படுகிறது.

8. கட்டணத்தைச் செலுத்தியதும், உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க ஒரு குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள்.

9. விண்ணப்பத்தின் உறுதிப்படுத்தலுக்குப் பிறகு கார்டு-பிளாக் கோரிக்கை கார்டில் உருவாக்கப்படும்.

10. இறுதியாக, உங்களது விண்ணப்பம் RTA ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, பழைய கார்டில் உள்ள பேலன்ஸ் புதிய அட்டைக்கு மாற்றப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் SMS ஒன்றைப் பெறுவீர்கள்.

பொதுவாக, நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாளிலிருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு பணத்தைத் திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. அத்துடன் புதிய அட்டை உங்கள் வீட்டு முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.

மேலும், நீங்கள் பெற்ற புதிய நோல் கார்டை ஒரு நோல் டாப்-அப் இயந்திரம், பொது பார்க்கிங் மீட்டர் அல்லது மெட்ரோ நிலையத்தில் செக்-இன் மற்றும் செக்-அவுட் கேட் ஆகியவற்றில் செருகுவதன் மூலம் திரும்பப் பெற்ற தொகையை செயல்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!