அமீரக செய்திகள்

அபுதாபி, துபாய், ஃபுஜைரா மற்றும் ஓமான் ஆகிய பகுதிகளை இணைக்கும் சொகுசு ரயில்!! புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எதிஹாட் ரயில்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் நேஷனல் ரெயில் நெட்வொர்க் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டரான எதிஹாட் ரயில், எமிராட்டி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் ஒரு சொகுசு ரயில் அனுபவத்தை வெளியிட, இத்தாலிய சொகுசு விருந்தோம்பல் நிறுவனமான Arsenale உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த சொகுசு ரயில் அமீரகத்தில் இருந்து ஓமான் எல்லையை நோக்கி பயணிக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்த பாதையானது மெசீரா வழியாக லிவா பாலைவனம் மற்றும் அதன் புகழ்பெற்ற ஒயாசிஸ் வழியாக செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், GCC இரயில்வே செயல்பாட்டிற்கு வந்ததும், இது பரந்தளவில் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சவுதி அரேபியாவில் அறிவிக்கப்பட்ட தி ட்ரீம் ஆஃப் தி டெசர்ட் (The Dream of the Desert) திட்டத்தைத் தொடர்ந்து, அர்செனாலின் இரண்டாவது சர்வதேச சொகுசு ரயில் திட்டமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

இத்தாலிய வடிவமைப்பு:

இது குறித்து எதிஹாட் ரயிலின் CEO ஷாடி மலாக் அவர்கள் பேசுகையில், அர்செனலே உடனான ஒப்பந்தம், ஐக்கிய அரபு அமீரகத்தில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை தேசிய ரயில் நெட்வொர்க் மூலம் தூண்டுவதற்கான எதிஹாட் ரயிலின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்று என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சொகுசு ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், முழுமையாக தனிப்பயனாக்கப்பட்ட ரயிலுடன் சொகுசு பயண சேவையை வழங்கும் உலகின் முதல் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் இருக்கும் என்று ஒரு செய்திக்குறிப்பில் அர்செனலே தெரிவித்துள்ளது. இந்த என்ஜின் சுமார் 15 சொகுசு வண்டிகளைக் கொண்டிருக்கும் மற்றும் அவை அபுதாபி மற்றும் துபாயின் காஸ்மோபாலிட்டன் நகரங்கள் வழியாக, ஃபுஜைராவின் இயற்கை இடங்களுக்கும், ஓமான் எல்லையில் அதன் செங்குத்தான மலைகள் மற்றும் லிவா பாலைவனம் போன்ற இடங்களுக்கும் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இத்தாலியின் புக்லியா மற்றும் சிசிலியில் அமைந்துள்ள சிறப்பு தொழிற்சாலைகளில் வண்டிகள் முழுமையாக புதுப்பிக்கப்படும் என்றும் அர்செனலே குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து Arsenale SpA இன் CEO போலோ பர்லேட்டா என்பவர் கூறுகையில், ஒரு தனித்துவமான திட்டத்தில் Etihad Rail உடன் கூட்டு சேருவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிற ஒப்பந்தங்கள்:

எதிஹாட் ரயில் நிறுவனமானது மத்திய கிழக்கு இரயிலின் 17வது பதிப்பில் DHL குளோபல் ஃபார்வர்டிங் நிறுவனம் உட்பட மற்ற ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. MICCO உடனான ஒப்பந்தம், ONCF உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், Uber உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஸ்கைகோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், புஜைரா இயற்கை வளக் கழகத்துடன் (FNRC) உடன்படிக்கை போன்றவற்றில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட நேஷனல் ரயில் நெட்வொர்க், இப்போது அனைத்து எமிரேட்களையும் இணைப்பதுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நான்கு முக்கிய துறைமுகங்களுடன் குடியிருப்பு, தொழில்துறை மற்றும் வணிக மையங்களையும் இணைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!