அமீரக செய்திகள்

அமீரகத்தில் 33,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள், சுகாதார நிபுணர்கள் தேவை! – என்ன படிக்கலாம் என எண்ணுபவர்களின் கவனத்திற்கு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 2030ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 33,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார வல்லுநர்கள் தேவைப்படுவதால், வரும் ஆண்டுகளில் சுகாதார பணியாளர்களுக்கான தேவை நாட்டில் அதிவேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி Colliers Healthcare & Education பிரிவின் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அபுதாபியில் 2030 ஆம் ஆண்டுக்குள் 11,000 செவிலியர்கள் மற்றும் மருத்துவம் தொடர்புடைய 5000 சுகாதார நிபுணர்ளுக்கான காலிப்பணியிடங்கள் இருக்கும் என தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் துபாயில் 6,000 மருத்துவர்கள் மற்றும் 11,000 செவிலியர்களுக்கு 2030 ஆம் ஆண்டுக்குள் தேவை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேவையானது அமீரகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு, சுற்றுலாவாசிகளின் வருகை, நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு, வயதான மக்கள் தொகை, அதிகரித்து வரும் நோயாளிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் சிகிச்சை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் போன்றவற்றினால் உந்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, Covid-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் சுகாதார நிபுணர்களுக்கான தேவை விறுவிறுவென அதிகரித்துள்ளது. ஏனெனில், சுகாதார சேவை வழங்குநர்கள் அதிக தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களை, குறிப்பாக நர்சிங் துறைகளில் பணியமர்த்த உள்ளனர்.

Colliers கருத்துப்படி, அமீரகத்தில் உள்ள 157 மருத்துவமனைகளில் 104 மருத்துவமனைகள் தனியார் துறையால் இயக்கப்படுகின்றன. அதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 18,000 படுக்கைகள் உள்ளதாகவும், அவற்றில் 8,356 படுக்கைகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றதாகவும் கூறப்படுகிறது.

அதே போன்று நாட்டில் பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, துபாயில் 10,376, அபுதாபியில் 10,141 மற்றும் வடக்கு எமிரேட்ஸில் 5,358 உட்பட மொத்தம் 26,736 பேர் பணிபுரிகின்றனர். அமீரகத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் எண்ணிக்கை சதவீதமானது முறையே 1,000 பேருக்கு 2.9 சதவீதமாகவும், மற்றும் 6.4 சதவீதமாகவும் உள்ளது. மேலும் இது மற்ற GCC நாடுகளின் சராசரியை விட அதிகம் எனவும் Colliers குறிப்பிட்டுள்ளது.

தேவை உள்ள காலிப்பணியிடங்கள்:

அபுதாபியில் பெரும்பாலும் மனநல மருத்துவம், அவசர மருத்துவம், கதிர்வீச்சு புற்றுநோயியல், தீவிர சிகிச்சை மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை துறையில் அதிக மருத்துவர்கள் நியமிக்கப்படும். அதே போன்று மருத்துவம் தொடர்புடைய பிரிவில் முக்கியமாக உளவியல், பிசியோதெரபி, தொழில் சிகிச்சை, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அவசரகால தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அபுதாபியில் அதிகமாக இருக்கும்.

அதுபோல, துபாயில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மயக்கவியல், மகப்பேறியல், நாளமில்லாச் சுரப்பி, இருதயவியல் மற்றும் சிறுநீரகவியல் ஆகிய துறைகளில் மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும்.

நாட்டில் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், குறிப்பாக உள்ளூர் வல்லுநர்கள் கிடைப்பதில் இன்னும் பற்றாக்குறை உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரப் பணியிடங்களில் உள்ள ஆள்பற்றாக்குறையை மருத்துவர் பதவிக்கு மட்டும் இல்லாமல், சுகாதாரப் பணியாளர்களின் பெரும்பகுதியை உருவாக்கும் செவிலியர்கள் மற்றும் பிற துணை மருத்துவ ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் Colliers தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!