வளைகுடா செய்திகள்

இந்திய நாட்டவர்கள் சவூதியில் பணிபுரிய இனி வேலைவாய்ப்புத் தேர்வு கட்டாயம்!! – சவூதி அரேபியாவின் புதிய நடவடிக்கை…

இந்திய நாட்டவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிவதற்கு ‘திறன் சரிபார்ப்புத் திட்டம் (Skill Verification Program – SVP)’ என்ற தேர்வை எடுத்துக் கொள்வது தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சவுதி அரசின் இந்த நடவடிக்கையானது நாட்டில் தொழில்முறை பணியாளர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும், தகுதியற்ற ஊழியர்களின் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கும் சவுதி அரேபியா எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.

ஆரம்ப கட்டத்தில் இந்தியர்களுக்கு குறிப்பிட்ட சில வேலைகளுக்கு மட்டுமே இந்த சோதனை கட்டாயமாக்கப்பட்டு, பின்னர் மற்ற அனைத்து தொழில்களையும் உள்ளடக்கியதாக படிப்படியாக விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த திறன் சரிபார்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே சவுதி அரேபியாவில் பணிபுரியும் அல்லது பணிபுரிய திட்டமிட்டுள்ள தொழில்முறை தொழிலாளர்கள் எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி பில்டிங் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், வெல்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்விட்ச்போர்டு அசெம்பிளர்கள் உட்பட மொத்தம் 19 தொழில்களுக்கு இப்போது இந்த தேர்வு கட்டாயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பலர் உட்பட பல இந்தியர்கள், மேற்கூறிய விசாக்களின் கீழ் சட்டப்பூர்வமாக சவூதி அரேபியாவிற்குள் நுழைந்து, பின்னர் கிடைக்கும் வேலைக்கு ஏற்ப தங்கள் பணிகளை மாற்றுவதும் பொதுவான ஒனரறாகும். அதேசமயம், மோசடி ஏஜென்டுகளுக்கு பலியாகும் சில நபர்களும் இந்த விசாக்களின் கீழ் சவுதி அரேபியாவிற்குள் நுழைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்த திறன் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தங்கள் தொழில்முறை சரிபார்ப்புச் சான்றிதழ்களைப் பெற்றவுடன், அவர்கள் தற்போதைய வேலையில் தொடரலாம் மற்றும் விசாவைப் புதுப்பிக்கலாம் அல்லது வேலை தேடும் போது புதிய வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிற்கான சவுதி அரேபியா தூதரகம் இந்த கட்டாயத் தேர்வு குறித்து ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) மற்றும் சவூதி அரசாங்க ஊடகம் (SPA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த திறன் சரிபார்ப்புத் திட்டம் இந்தியாவில் அதன் முதல் கட்டத்தை கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பரில் புது டெல்லி மற்றும் மும்பையில் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சவுதி அரேபிய அரசால் தற்பொழுது இந்தியர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, நாட்டில் தகுதி வாய்ந்த திறமையான பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்து 2021 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!