UAE: எரிபொருள் டேங்க் வெடித்து இரு ஆசிய நாட்டவர்கள் உயிரிழப்பு!! – வெல்டிங் பணியில் ஈடுபட்ட போது நிகழ்ந்த விபரீதம்…

அஜ்மானில் உள்ள அல் ஜுர்ஃப் தொழில்துறை பகுதியில் எரிபொருள் டேங்க் (fuel tank) வெடித்ததில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், இந்த சம்பவத்தில் பரிதாபமாக இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஆசிய நாட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அஜ்மான் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) காலை சரியாக 11 மணியளவில் வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அஜ்மான் காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுஐமி அவர்கள் கூறுகையில், ஒரு எரிபொருள் டேங்கின் மீது தொழிலாளர்கள் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, தீப்பொறி உள்ளே பறந்ததில் வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம், பணியிடத்தில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படாததும் இந்த விபத்து நடக்க காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.