அமீரக செய்திகள்

துபாய் காவல்துறைக்கு போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு ஈ-மெயில் உங்களுக்கு வந்ததா..?? எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

துபாயில் தற்போது பெருமளவில் நடந்து வரும் ஆன்லைன் மோசடி குறித்து புதிதாக ஒரு எச்சரிக்கையை துபாய் காவல்துறை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை குறித்த அறிவிப்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு துபாய் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மோசடி குறித்து விவரிக்கையில், அமீரக குடியிருப்பாளர்கள் பலருக்கு, அவர்கள் அபராதம் மற்றும் சேவைக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என துபாய் காவல்துறை தெரிவிப்பது போன்று ஈ-மெயில்களை பெறுவதாகவும் மேலும் அந்த ஈ-மெயிலில் கட்டணம் செலுத்துவதற்கு அதில் உள்ள லிங்கைக் கிளிக் செய்யுமாறும் வலியுறுத்தும் மெயில்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்த புகார்களை பெற்றதன் அடிப்படையில் துபாய் காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இத்தகைய இ-மெயில்களை மிகக் கவனமாகக் கையாளுமாறும், விழிப்புடன் இருக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், துபாய் காவல்துறையிடமிருந்து வந்ததாகக் கூறும் எந்த மெயில்களின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்குமாறும் பொதுமக்களை அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒருவேளை, அத்தகைய இ-மெயில்களைப் பெற்றால், எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்யவோ அல்லது உங்கள் வங்கிக் கணக்கு எண் போன்ற எந்தவொரு தனிப்பட்ட அல்லது நிதித் தகவலையும் வழங்கவோ வேண்டாம் என்றும் துபாய் காவல்துறை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் துபாய் காவல் துறையிடமிருந்து நிலுவையில் உள்ள அபராதங்கள் அல்லது சேவைக் கட்டணங்களை உடனடியாகச் செலுத்துமாறு தெரிவிக்கும் அறிவிப்பைக் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, இதில் லிங்க் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கும். இது பயனர்களை மோசடி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பொதுமக்கள் இது போன்ற மோசடியில் ஏமாறாமல் அதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!