அமீரக செய்திகள்

அமீரக புத்தாண்டு கொண்டாட்டம்: 3 கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் பிரம்மாண்ட 40 நிமிட வான வேடிக்கை நிகழ்ச்சி..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்னும் ஓரிரு நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன. அதற்கான பணிகள் மும்முரமாக அமீரகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் விதமாக சிறந்த ஒரு  புத்தாண்டு கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது அபுதாபி.

அபுதாபியில் உள்ள ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அபுதாபியில் உள்ள அல் வத்பாவில் நடைபெற்று வரும் ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் ஏற்பாட்டுக் குழுவானது, அதன் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் 40 நிமிடம் நடைபெறவுள்ள வான வேடிக்கையானது அளவு, நேரம் மற்றும் உருவாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் உலகின் முதல் முறையாக 3,000க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி ஒரு மாபெரும் ட்ரோன் நிகழ்ச்சி அல் வத்பாவின் வானத்தை ஒளிரச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தியேட்டர் நிகழ்ச்சிகள், சர்க்கஸ் நிகழ்ச்சிகள், ஃபன்ஃபேர் சிட்டியில் விளையாட்டுகள் மற்றும் பிற செயல்பாடுகள் உட்பட குழந்தைகளுக்கு ஏராளமான பொழுதுபோக்குகள் இதில் இருக்கும் என்றும் இதில் ஃபுட் டிரக்குகள், கியோஸ்க்குகள், பெவிலியன் உணவகங்கள், சூக் அல் வத்பா உணவகங்கள், உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த உணவு மற்றும் பானங்கள் ஆகியவை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

ஷேக் சையத் ஃபெஸ்டிவலானது வரும் மார்ச் 18, 2023 வரை, வாரநாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பார்வையாளர்களை வரவேற்கும். இந்த மாபெரும் கலாச்சார நிகழ்வானது ஆயிரக்கணக்கான உள்ளூர், சர்வதேச மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு பொழுதுபோக்கு இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!