அமீரக செய்திகள்

துபாயின் அடுத்த புதுமுயற்சி ‘டிரைவர் இல்லா படகு பயணம்’.. சோதனையின் இறுதி கட்டத்தை எட்டும் RTA…!!

ஓட்டுநர் இல்லாத தானியங்கி போக்குவரத்து சேவையை நோக்கி உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் துபாயில் ஏற்கெனவே ஓட்டுநர் இல்லாத தானியங்கி ஏர் டாக்ஸியின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதே போல் தானியங்கி பேருந்து சேவைகள், டாக்ஸி சேவைகள் என அமீரகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்பொழுது துபாயில் ஓட்டுநர் இல்லாத எதிர்காலத்தை வழங்குவதற்காக மிகவும் பாரம்பரியமான போக்குவரத்து வழிகளை துபாய் தேர்ந்தெடுத்துள்ளது. அதாவது, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் க்ரீக்கில் ஓட்டுநர் இல்லாத ஆப்ரா சோதனையை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

துபாயில் ஆப்ரா எனப்படும் பாரம்பரிய மரப்படகு சோதனை ஓட்டத்தின் போது, அல் ஜதாஃபிலிருந்து ஃபெஸ்டிவல் சிட்டி நிலையத்திற்குச் சென்றதாகவும், காற்று மற்றும் அலைகள் இருந்தபோதிலும் முன்வரையறுக்கப்பட்ட பாதையில் தங்கியிருந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக, RTA ஆப்ராக்களில் பயணிக்கும் நபர்களுக்கு கட்டணம் 2 திர்ஹம்களில் இருந்து தொடங்குகிறது. அதுபோல, இந்த சுய-ஓட்டுநர் சேவைக்கு ஆப்ராவில் சாதாரண பயணத்திற்கு சமமான செலவே ஆகும் என்று RTA வெளிப்படுத்தியுள்ளது. மேலும், நீங்கள் தேர்வு செய்யும் பாதை மற்றும் சேவையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் என்றும் RTA தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது, துபாயில் மலிவான போக்குவரத்து என்றால் அது ஆப்ரா சேவையாகும். தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் தங்களின் வேலைக்குச் செல்வதற்கு இதைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, 2 திர்ஹம் செலவில் பயணம் என்பது சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்பாட்டிற்கு எப்போது வரும்?

இந்த தானியங்கி சேவைக்கு கப்பல் வடிவமைப்பு மற்றும் இயக்கத்திற்கான ஆறு நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்போது வரை துபாயில் ஓட்டுநர் இல்லாத ஆப்ராவின் சோதனை ஓட்டம் நிலை 4 ஐ எட்டியுள்ளதாகவும், ஒரு மேற்பார்வையாளர் மூலம் இயங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்து 5வது நிலையை அடையும்போது, தானியங்கி சேவை மேலும் மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஆகவே, இந்த நிலை முடிந்த பின்னர், பொதுப் போக்குவரத்திற்காக ஓட்டுநர் இல்லாத படகுகளை அறிமுகப்படுத்தும் முதல் நகரமாக துபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை செய்யும் விதம்

இந்த ஆப்ராவில் தானியங்கு சுய-ஓட்டுநர் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக ரேடார்கள், சென்சார்கள் மற்றும் கேமராக்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையை பார்க்கவும், செல்லவும் உதவுகின்றன. மேலும், இதிலுள்ள மேம்பட்ட தொழில்நுட்பம் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தேவைப்படும்போது பதிலளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது, ஆப்ராவில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் தலையிட ஒரு கேப்டன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், படகு எந்த பிரச்சனையும் இல்லாமல் தானாகவே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு தயாரிப்பு:

இந்த எலெக்ட்ரிக் ஆப்ரா உள்நாட்டில் அல் கர்ஹூத் மரைன் மெய்ண்டனன்ஸ் சென்டரில் RTA ஊழியர்களின் திறன் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், RTA-வின் கூட்டாண்மை நிறுவனங்களான Exalto Emirates, Marakeb ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த தானியங்கி அமைப்புகளின் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் துபாயில் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் மொத்த போக்குவரத்தில் 25 சதவீதத்தை சுய-ஓட்டுநர்களாக மாற்றுவதற்கான ஒரு லட்சிய உத்தியை RTA கொண்டுள்ளது என்றும், அதில் இந்த ஆண்டு இறுதிக்குள் குரூஸ் தானியங்கி டாக்ஸிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!