வளைகுடா செய்திகள்

அடுத்த 45 நாட்களுக்கு வெப்பம் அதிதீவிரமாக இருக்கும்.. பகல் 12 மணி முதல் 3 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம்.. எச்சரிக்கை விடுத்த சவுதி வானிலை மையம்..!!

சவுதி அரேபியா நாட்டின் பிரபலமான வானிலை ஆய்வாளர் டாக்டர் காலித் அல் ஜாக், பொதுமக்கள் அடுத்த 45 நாட்களுக்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியினை பகிர்ந்துள்ள டாக்டர் காலித், காற்றானது நச்சுப்புழுதியினை அதிகமாக சுமந்து வருவதால், மோசமான சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தற்போதைய வானிலை நிகழ்வின் விளைவாக காற்று புயல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதன் விளைவாக தூசி மற்றும் துகள்கள் போன்றவை காற்றுடன் கலந்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்றும் விளக்கியுள்ளார்.

அத்துடன் இந்த காற்றுகளை இரண்டு குழுக்களாக வகைப்படுத்தலாம் என்றும் அவர் விவரித்துள்ளார். அதில் முதலாவது வகையானது திஹாமியா (Tihamia), ஏமன் மற்றும் ஆப்பிரிக்க கடற்கரைகளில் ஏற்படும் நிரந்தர காற்றாகும். இந்த காற்று கோடை காலம் முழுவதும் தூசியினை கிளப்பிக் கொண்டிருக்கும். எனவே, இந்த பருவம் “குபைரா” அல்லது தூசி பருவம் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாவது வகை காற்றானது, நண்பகல் நேரத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் காற்றாகும். பாலைவன மணலை இடமாற்றும் செய்யும் இந்நிகழ்வானது “அல் பவேரே” என்று அழைக்கப்படுகின்றது. இது பொருட்கள் முழுவதிலும் தூசியை படிய வைக்கும் தன்மை உடையதாகும்.

அது மட்டுமல்லாமல், தூசியை கிளப்பும் இந்த புயலானது கோடை காலம் முழுவதும் நீடிக்கும் என்றும், இவை வெப்பமான விஷக்காற்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இவரது ட்விட்டர் பதிவினை பின்பற்றி சவுதி அரேபியா நாட்டின் தேசிய வானிலை மையமும் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இந்த தூசிகளின் காரணமாக வடக்கு எல்லைகளில் உள்ள பகுதிகள் தெரியாமல் போகும் அளவிற்கு தூசியின் வேகமானது இருக்கும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக கடற்கரைகள், ரியாத், கிழக்கு நஜ்ரான் மற்றும் மதீனா பகுதிகளில் தூசிகளில் அடர்த்தியானது அதிகமாக இருக்கும் என்றும் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், சவூதி அரேபியாவின் ஜசான் மற்றும் ஆசிர் மாவட்டங்களின் சில பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடையிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கடுமையான வானிலையை கருத்தில் கொண்டு, குடிமக்கள் வானிலை நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் பகல் நேரங்களில் அதிக வெப்பத்தில் பயணம் செல்வதை தவிர்த்து உடல் நலனை பாதுகாக்குமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!