அமீரக செய்திகள்

விமான தடையால் சவூதி, குவைத் செல்ல முடியாமல் அமீரகத்தில் சிக்கித்தவித்த 300 பயணிகள்..!! உதவிக்கரம் நீட்டிய துபாய் மார்கஸ் மையம்..!!

புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஓமான் நாடுகள் தங்களின் நாட்டு எல்லைகளை மூடியுள்ளது. அதே போன்று அனைத்து நாடுகளுக்கும் இடையேயான விமான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அமீரகம் வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து சவூதி அரேபியா மற்றும் குவைத்திற்கு செல்லமுடியாமல் சிக்கித்தவித்த சுமார் 300 பயணிகளுக்கு துபாய் மார்கஸ் அமைப்பினர் அடைக்கலம் அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கும் குவைத்திற்கும் இடையே தடைசெய்யப்பட்டிருந்த நேரடி விமான போக்குவரத்து சேவைகள் இது வரையிலும் தொடங்கப்படாமல் இருப்பதினால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் பலரும் அமீரகம் வழியாக இவ்விரு நாடுகளுக்கும் சென்று வருகின்றனர். இந்தியாவிலிருந்து டிராவல் ஏஜென்சி மூலமாக அமீரகம் வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர் இங்கிருந்து தாம் பணிபுரியும் நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட விமான தடையை தொடர்ந்து ஹோட்டல்களிலும் மற்றும் பிற கட்டண தங்குமிடங்களிலும் தங்கியிருந்தவர்களின் தனிமைப்படுத்தலுக்கான காலம் முடிந்தவர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில் துபாய் மார்கஸ் அமைப்பினர் இந்த உதவிக்கரம் நீட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் மார்கஸ் மையத்தின் தன்னார்வலர்களின் பிரிவான இந்திய கலாச்சார அறக்கட்டளை (ICF), கட்டுமான நிறுவனமான ஆசா குழுமத்துடன் இணைந்து தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் சவூதி அரேபியா மற்றும் குவைத்திருக்கு செல்ல முடியாமல் அமீரகத்தில் தொடர்ந்து தங்குவதற்கான வழிமுறைகள் இல்லாத பயணிகளுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவை ஏற்பாடு செய்வதாக அந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மேலாளர் டாக்டர் அப்துல் சலாம் சகாஃபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் “துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க்கில் 300 நபர்களை இரண்டு வாரங்களுக்கு தங்க வைக்கக்கூடிய ஒரு கட்டிடத்தை நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ளோம். சிக்கித்தவிக்கும் பயணிகளை அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் கட்டண தங்குமிடங்களில் இருந்து ​​அவர்களை அழைத்துச் செல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சலவை செய்வதற்கான வசதிகளும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார். மேலும் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ய அமீரக அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகள் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் விவரிக்கையில் “அவர்கள் (சிக்கித்தவிக்கும் பயணிகள்) இங்கே எங்களின் விருந்தினர்கள். அவர்கள் நெருக்கடியில் இருக்கும்போது நாங்கள் அவர்களை வரவேற்று அவர்களுக்கு உதவ வேண்டும். இதுபோன்ற காரணங்களை ஆதரிக்கும் நல்ல இதயமுள்ள வணிகர்கள் இங்கே உள்ளனர். எங்கள் மார்கஸ் மையத்தின் புரவலராக இருக்கும் இந்தியாவின் கிராண்ட் முப்தி ஷேக் அபுபக்கர் அகமதுவின் உத்தரவின் பேரில், ஆசா குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முஹம்மது சாலிஹ் அவர்களுடன் இனைந்து நாங்கள் ஒத்துழைத்தோம்” என்றும் கூறியுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக ஒரு வாட்ஸ்அப் குழுவை அமைத்து, பல குழுக்களுக்கு இணைப்பை அனுப்பிய பின்னர் நம் அமைப்பின் உறுப்பினர்கள் உதவியுடன் சிக்கித் தவிக்கும் பயணிகளைக் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் மார்கஸ் மையம் மற்றும் ஆசா குழுமத்தின் இந்த உதவியினால் சிக்கித்தவித்த பயணிகள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அவர்களின் இந்த சேவைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இந்தியாவிலிருந்து அமீரகம் வழியாக மேற்கண்ட நாடுகளுக்கு செல்ல உணவு மற்றும் தனிமைப்படுத்தலுக்கான கட்டணமாக இந்திய ருபாய் மதிப்பில் ரூ .70,000 செலவளித்ததாகவும் பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

source : Gulf News

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!