அமீரக செய்திகள்

4,000 திர்ஹம் சம்பளம் வாங்கும் இந்தியருக்கு கிடைத்த 15 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட்…!! பிறந்தநாளில் டிக்கெட் வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

துபாயில் வசிக்கும் இந்தியரான சகில் கான் சர்வார் கான் என்பவர், தனது பிறந்தநாளில் வாங்கிய பிக் டிக்கெட் மூலம், அபுதாபி பிக் டிக்கெட்டில் 15 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

கடந்த ஜூலை 25ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று வாங்கிய டிக்கெட் எண் 191115 மூலம், கிராண்ட் பரிசை வென்ற சர்வார் கான், 2011 ஆம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருவதாகவும், 2015 ஆம் ஆண்டு முதல் பிக் டிக்கெட்டுகளை வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் 4,000 திர்ஹம் சம்பளம் பெறும் கான் அவரது வெற்றி குறித்து விவரிக்கையில், அவரது நிறுவனத்தில் உள்ள 10 முதல் 15 வரையிலான நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் குழுவாக டிக்கெட் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் தான் அதில் பங்களித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், டிக்கெட் வாங்குவதில் பங்களிக்க கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்து நபர்களின் எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கும் என்றும், ஒவ்வொரு நபரும் 50 மற்றும் 100 திர்ஹம்களுக்கு இடையில் பங்களிப்பு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த குழு, பிக் டிக்கெட் மட்டுமின்றி, துபாய் டூட்டி ஃப்ரீ, மஹ்சூஸ் டிரா போன்ற குலுக்கல் போட்டிகளிலும் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கான் கிட்டத்தட்ட 100,000 க்கும் அதிகமான கடன் மற்றும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால், எவ்வளவு நிதிச் சிக்கலில் இருந்தாலும், எப்போதும் அவர் பிக் டிக்கெட்டுகளை வாங்கும் குழுவில் ஒரு பகுதியாக இருக்க முயற்சித்ததாக அவர் கூறியுள்ளார்.

தற்போது பொறியியல் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் 39 வயதான கான், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அவரது வீட்டுக்குத் திரும்ப அதிக கடன்கள் செலுத்த இருக்கும் நிலையிலும், அவர் வாங்கும் 4,000 திர்ஹம் சம்பளத்தில் பிக் டிக்கெட்டுக்காக குழுவில் பணத்தை சேகரிக்க எப்போதும் 50 திர்ஹம் ஒதுக்கி வைத்திருப்பாராம்.

இவ்வாறு, நீண்ட காலமாக அதிர்ஷ்டத்திற்கு முயற்சித்து வரும் கான் அவரது வெற்றியை அறிந்த தருணம் குறித்து மனம் திறக்கையில், “அன்று ரேஃபிள் டிராவின் நேரடி ஸ்ட்ரீமிங்கைப் பார்த்துக் கொண்டிருதேன், எனது டிக்கெட் எண் எனக்கு நினைவில் இல்லை. மேலும், நிகழ்ச்சியில் ஹோஸ்ட் வெற்றியாளரின் பெயரை அறிவித்தபோது, ​​அது தெளிவாக இல்லை, ஆனால் ஒரு உள் குரல் என்னிடம் சொன்னது, நான் வெற்றி பெற்றேன், என் நேரம் வந்துவிட்டது. உடனே, நான் என் அறை தோழனை வலுவாக பிடித்துக்கொண்டேன். இறுதியாக, என் பெயர் திரையில் ஒளிர்ந்தபோது, ​​அது நம்பமுடியாத தருணமாக இருந்தது” என்று நெகிழ்ந்துள்ளார்.

மேலும், டிராவில் வென்ற ரொக்கத் தொகையில், கான் தனது குடும்பத்தை அமீரகத்திற்கு அழைத்து வர எண்ணியிருப்பதாகவும், அவர்கள் துபாயைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது கடன்களை அடைத்து விட்டு, சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய கான், இதற்கு முன்பு ஒரு போதும் டிக்கெட் வாங்குவதை கைவிடவில்லை, இனியும் தொடர்ந்து டிக்கெட் வாங்குவேன் என்றார். இத்தருணத்தில், அவருக்கு உறுதுணையாக இருந்த பணியில் உள்ள சீனியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!